Namma Madurai App Namma Madurai App
மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபம் புனரமைப்பு பணிக்கு 2026 பிப்ரவரி வரை அவகாசம் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபம் புனரமைப்பு பணிக்கு 2026 பிப்ரவரி வரை அவகாசம் – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

160 days ago 08 Nov 2025

Share this story

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபம் புனரமைப்பு பணியை 2026 பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அவகாசம் வழங்கியுள்ளது.

மதுரை மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்தது: புதுமண்டபத்தை புனரமைக்க கடைகள் குன்னத்தூர் சத்திர வணிக வளாகத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால் மண்டபம் இதுவரை புனரமைக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. புனரமைப்பு பணிக்காக ஒருவர் நன்கொடை வழங்க முன்வந்துள்ளார். புனரமைப்பு பணி ஒப்புதலுக்காக அறநிலையத்துறை கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே புனரமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கு 2024 ஜூலை 19 அன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கூறியதாவது: அறநிலையத்துறை கமிஷனரின் ஒப்புதலுடன் புனரமைப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. சிற்ப வேலைப்பாடு என்பதால் கூடுதல் கால அவகாசம் தேவைப்படும். திட்ட மதிப்பு ரூ. 1 கோடி 50 லட்சம். இப்பணியை நன்கொடை அடிப்படையில் ரூ. 1 கோடி 50 லட்சத்தில் செய்துதர மதுரை செல்லூர் ராஜேந்திரன் முன்வந்துள்ளார் என கூறப்பட்டது. இதனை பதிவு செய்த இரு நீதிபதிகள் அமர்வு, “புனரமைப்பு பணியை 2024 டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டது.

பின்னர், மீனாட்சி அம்மன் கோயில் செயல் அலுவலர், “பெரும்பாலான பணி முடிந்துவிட்டது. இது நுட்பமான பணி என்பதால் நிபுணர்களின் ஆலோசனையுடன் மேற்கொள்ளப்படுகிறது. 2026 பிப்ரவரி 28 வரை அவகாசம் தேவை” என மனு செய்தார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சி. குமரப்பன் அமர்வு விசாரித்தது. கோயில் தரப்பில் வழக்கறிஞர் ராஜேஷ்குமார் ஆஜரானார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: “அவகாசம் அளிக்கப்படுகிறது. புனரமைப்பு பணி நிறைவு பெற்றது குறித்து கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத்துறை தரப்பில் 2026 மார்ச் 2க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவித்தனர்.

Namma Madurai

Local News & Updates

More News