Back
LOCAL EVENTS
LOCAL EVENTS
மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோயற்ற வலிகளுக்கும் சிகிச்சை வசதி
168 days ago
31 Oct 2025
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையின் மயக்கவியல் துறையின் கீழ் செயல்படும் வலி நீக்கியல் பிரிவில், புற்றுநோய் அல்லாத நீண்டநாள் வலிகளுக்கும் (முதுகுவலி, மூட்டு வலி போன்றவை) தனியான சிகிச்சை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளில் 90 சதவீதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். புற்றுநோய் அல்லாத வலிகளுக்கான சிகிச்சை குறித்த விழிப்புணர்வு இன்னும் குறைவாக இருப்பதாக துறைத்தலைவர் டாக்டர் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: மருத்துவமனையின் 8வது வார்டில் தினமும் சுமார் 30 பேர் வரை புறநோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலும் புற்றுநோயாளிகள் தான். ஆனால் முதுகுவலி, மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் தங்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் செய்து, போதிய ஓய்வு எடுத்தால் சுமார் 70 சதவீதம் பேருக்கு அறுவை சிகிச்சை தேவையின்றி நலம் பெற முடியும். 5 சதவீதம் பேருக்கு மட்டும் அறுவை சிகிச்சை அவசியம் தேவைப்படும் நிலையில், மீதமுள்ளோருக்கு வலி நீக்கியல் சிகிச்சை சிறந்த மாற்றாக இருக்கும் என்றார்.
ரேடியோ அதிர்வெண் சிகிச்சை மற்றும் பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா (PRP) சிகிச்சை போன்ற முறைகளின் மூலம் நீண்டநாள் வலியில் இருந்து நிவாரணம் பெற முடியும் என்றும், நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு முன்பாக வலி நீக்கியல் நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது என்றும் அவர் குறிப்பிட்டார். சென்னைக்கு அடுத்து வலிநீக்கியல் வார்டு தனியாக அமைந்துள்ள ஒரே அரசு மருத்துவமனை மதுரையில்தான் எனவும், தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை புறநோயாளிகளுக்கான ஆலோசனை வழங்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Namma Madurai
Local News & Updates