Namma Madurai App Namma Madurai App
அதிகரிக்க என்ன வழி: நான்கில் ஒரு பங்கு அளவாக சுருங்கிய வெற்றிலை விவசாயம்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

அதிகரிக்க என்ன வழி: நான்கில் ஒரு பங்கு அளவாக சுருங்கிய வெற்றிலை விவசாயம்

22 days ago 12 May 2026

Share this story

மதுரை சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தாலும் வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். சாகுபடி, மதிப்புக்கூட்டும் நுட்பத்திற்கு தமிழக அரசு உதவ வேண்டுமென கோரிக்கை வைத்தனர். மற்ற வெற்றிலைகளை விட சோழவந்தான் வெற்றிலையில் கரோட்டீன், தையமைன், ரைபோ பிளேவின், நிக்கோடினிக் அமிலம் வேதிப்பொருட்கள் கூடுதலாக இருப்பது ஆராய்ச்சி மூலம் உறுதி செய்யப்பட்டதால் மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் 2022-23 ல் புவிசார் குறியீடு பெறப்பட்டது.மதுரையில் 200 எக்டேரில் சோழவந்தான், இரும்பாடி, கருப்பட்டி, மட்டப்பாறை, மண்ணாடிமங்கலம், முள்ளிப்பள்ளம், திருவேடகம், தேனுார், துவரிமான் பகுதிகளில் சாகுபடியான நிலையில் தற்போது 56 எக்டேராக சுருங்கி விட்டது. நோய் தாக்குதலே சாகுபடி குறைந்தற்கு முக்கிய காரணம். சோழவந்தான் வெற்றிலைக் கொடிக்கால் விவசாயிகள் சங்கச் செயலாளர் சுகுமாறன், முள்ளிப்பள்ளம் வெற்றிலை விவசாயிகள் சங்கத் தலைவர் மார்நாட்டன் கூறியதாவது:
வெறுமனே வெற்றிலை கொடிக்கால் நடவு செய்ய முடியாது. கொடிக்கால் பற்றி படர்வதற்கு அகத்தி மர விதையை முதலில் நடவு செய்ய வேண்டும். அதற்கே ரூ.பல ஆயிரம் செலவாகிறது. விதை நட்ட 70 வது நாளில் வெற்றிலை கொடிக்கால் நடவு செய்தால் 3வது மாதத்தில் இருந்து மாதந்தோறும் வெற்றிலை அறுவடை செய்யலாம். முன்பு நான்காண்டுகள் வரை பலன் தந்த கொடிக்கால்கள் இரண்டாண்டில் நோய் தாக்கி இறக்கின்றன. மீண்டும் மீண்டும் நடவு செய்வது உற்பத்திச் செலவை அதிகரிக்கிறது. சீசன் நேரத்தில் கிலோ ரூ.200க்கும் மற்ற நேரங்களில் ரூ.100க்கும் விலை போகிறது. வெயிலில் வாடி பட்டுப் போகிறது என்றால் மழைக்காலத்தில் நோய் தாக்கி வீணாகின்றன. இதனாலேயே நிறைய விவசாயிகள் கொடிக்கால் விவசாயத்தை கைவிட்டனர். நோய் தாக்காத நாற்றுகளை தோட்டக்கலை உற்பத்தி செய்துதர வேண்டும். எங்களை ஒருங்கிணைந்து உழவர் உற்பத்தியாளர் குழு அமைத்து அதன் மூலம் மதிப்புக்கூட்டு பொருட்களை தயார் செய்வதற்கு உதவ வேண்டும் நஷ்டமடையும் போது அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி கூறியதாவது: புவிசார் குறியீடு பெற்ற விளைபொருளை அக்குறியீடுடன் விற்பதற்கு புவிசார் குறியீடு பயனாளர் சான்றினை விவசாயிகள் பெற வேண்டும். 10 பேருக்கு சான்றிதழ் வழங்கியுள்ளோம். மீதமுள்ள விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்றவர்கள் சோழவந்தான் வெற்றிலை உற்பத்தியாளர் என்ற பெயரில் பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு ஏற்பாடு செய்யலாம். குறைந்தது 200பேர் கொண்ட குழுவாக இணைத்தபிறகு வேளாண் அறிவியல் நிலையம் மூலம் மதிப்புக்கூட்டு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும். சோழவந்தான் வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலரை (81486 65738) அணுகி புவிசார் குறியீடு பயனாளர் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்றார்.

Namma Madurai

Local News & Updates

More News