Namma Madurai App Namma Madurai App
மதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் 100 யூனிட் ரத்தம் தேவை – “உயிர் காப்போம், ரத்தம் கொடுப்போம்!”
Back HEALTH NEWS
HEALTH NEWS

மதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் 100 யூனிட் ரத்தம் தேவை – “உயிர் காப்போம், ரத்தம் கொடுப்போம்!”

209 days ago 06 Nov 2025

Share this story

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை மற்றும் அதன் கீழ் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தினசரி குறைந்தது 100 யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. தற்போது கல்லூரிகளில் தேர்வுகள் மற்றும் விடுமுறைகள் நடைபெறுவதால், ரத்ததானம் குறைந்து பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்லூரிகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் இணைந்து நடத்திய ரத்ததான முகாம்களின் மூலம் மொத்தம் 30 ஆயிரம் யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. இதில் 35 சதவீதம் தனிநபர்களிடமிருந்து பெறப்பட்டவை. இவ்வாறு சேகரிக்கப்பட்ட ரத்தத்திலிருந்து சிவப்பணு, தட்டணுக்கள், பிளாஸ்மா ஆகியவை பிரிக்கப்பட்டு 72 ஆயிரம் யூனிட்களாக மருத்துவ தேவைகளுக்காக வழங்கப்பட்டன.
பெருகும் தேவை
மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு மட்டுமின்றி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தீவிர விபத்து சிகிச்சை பிரிவு, பல்நோக்கு மருத்துவமனை, தோப்பூர் அரசு மருத்துவமனை போன்ற இடங்களுக்கும் ரத்தம் அனுப்பப்படுகிறது. இதனால் தினமும் 100 யூனிட் ரத்தம் கிடைத்தாலே பற்றாக்குறை ஏற்படாமல் நோயாளிகளுக்கு வழங்க முடியும் என ரத்தவங்கி துறைத்தலைவர் டாக்டர் சிந்தா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:
“கல்லூரி செமஸ்டர் தேர்வுகள், கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் ஏப்ரல், மே மாதங்களில் முகாம்கள் நடத்த முடியாது. இந்த காலத்தில் குடியிருப்போர் நலச்சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்வந்து ரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்தால் பற்றாக்குறையை சமாளிக்கலாம்,” என்றார்.
ரத்ததானம் செய்ய விருப்பமுள்ள நண்பர்கள் குழுக்கள், நலச்சங்கங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் முகாம் அமைக்க விரும்பினால், அந்த இடத்திற்கே நடமாடும் ரத்தவங்கி பஸ் கொண்டு வரப்படும். ஒரே நேரத்தில் நான்கு பேர் பஸ்சில் இருந்தபடியே ரத்தம் வழங்கலாம். இடவசதி இருப்பின் அங்கேயே முகாம் அமைத்து ரத்தம் சேகரிக்கும் வேன் அனுப்பப்படும்.
தனிநபர்கள் காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நேரடியாக ரத்தவங்கிக்கு வந்து தானம் செய்யலாம்.
தொடர்பு எண்: ? 82489 23925.

Namma Madurai

Local News & Updates

More News