Namma Madurai App Namma Madurai App
தண்ணீரின்றி முடங்கியது விவசாயம்: வருமானமின்றி குன்றத்து விவசாயிகள்
Back LOCAL EVENTS
LOCAL EVENTS

தண்ணீரின்றி முடங்கியது விவசாயம்: வருமானமின்றி குன்றத்து விவசாயிகள்

24 days ago 19 May 2026

Share this story

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதி மானாவாரி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் பலவற்றிலும் தண்ணீர் வறண்டதால் விவசாயம் முற்றிலும் முடங்கியதால், விவசாயிகள் வருமானமின்றி தவிக்கின்றனர். திருப்பரங்குன்றம் பகுதியில் தென்பழஞ்சி, வடபழஞ்சி, வேடர் புளியங்குளம், சாக்கிலிப்பட்டி, தோப்பூர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட மானாவாரி கண்மாய்கள் உள்ளன. கனமழை பெய்தால் மட்டுமே இக்கண்மாய்கள் நிரம்பும். நிலத்தடி நீரும் உயர்ந்து கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் கிடைக்கும்.
ஆழ் குழாய்கள், கிணறுகளின் தண்ணீர் மூலம் நெல், காய்கறிகள், பருத்தி பயிரிடுவர். கண்மாய் நிரம்பினால் மட்டுமே கண்மாய் தண்ணீரை நம்பியுள்ள நிலங்களில் நெல் பயிரிடுவர். இந்நிலையில் அனைத்தும் வறண்டதால் விவசாயம் பாதித்துள்ளது. விவசாயிகள் பாண்டி மூன்று ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து விட்டது. கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. பெரும்பாலான ஆழ்குழாய் கிணறுகளிலும் நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது. சில பகுதிகளில் குறைந்தளவு தண்ணீர் உள்ளது. அதுவும் விவசாயத்திற்கு போதுமானதாக இல்லை. அதனால் மூன்று ஆண்டுகளாக நெல், காய்கறிகள், பருத்தி பயிரிட முடியவில்லை. இதனால் வருமானம் கிடைக்கவில்லை. கால்நடைகளுக்கு வைக்கோல், புற்கள் பசுந்தீவனமும் கிடைக்கவில்லை. விலை கொடுத்து தீவனம் வாங்கும் நிலை உள்ளது. இந்தாண்டு நெல் நடவு அதிகம் இல்லாததால் வைக்கோல் விலையும் உயர்ந்துள்ளது.
இப்பகுதியில் 100க்கும் மேலான ஏக்கரில் மல்லிகை, பிச்சி, முல்லை பூ சாகுபடியாகி உள்ளது. அதற்கும் தண்ணீர் இல்லை. எனவே விலைக்கு தண்ணீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். வேறு வேலை தெரிந்தவர்கள் அந்தப் பணிகளுக்காக சென்று விட்டனர் விவசாயத்தை மட்டுமே நம்பியவர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றோம். இது தொடர்ந்தால் விவசாயத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். மானாவாரி கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் வருவதற்கும், மானாவாரி விவசாயிகளுக்கு ஆடு, மாடு, கோழிகள் வளர்க்க மானிய கடன் வழங்கவும் அரசு உதவ வேண்டும் என்றனர்.

Namma Madurai

Local News & Updates

More News