மதுரை: பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று முன்தினம் மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில், மூன்று ஆசிரியைகள் காயமடைந்தனர்.
மதுரை மாவட்டம், பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு, வகுப்பறையில், மாணவர்கள் இரு பிரிவாக மோதினர். பின்வளாக பகுதிக்கும் சென்று செங்கல், மரக்கட்டையால் தாக்கி கொண்டனர். அப்போது தடுக்க சென்ற ஆசிரியை காயமடைந்தார். மேலும், இரு ஆசிரியைகள் காயமடைந்தனர். ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
தலைமையாசிரியர் விசாரணையில், மோதலில் ஈடுபட்ட மாணவர்களை எச்சரித்து அனுப்பினார். நேற்று காலையிலும் அதே மாணவர்கள் பள்ளி வளாகத்தில் மீண்டும் மோதிக்கொண்டனர். இதற்கான காரணம் குறித்து மேல்விசாரணை நடக்கிறது. ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'மோதலில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோரை அழைத்து கண்டிக்க வேண்டும். 'மாணவர் நலன் கருதி, மென்மையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வதில்லை. 'போதை தரும் சில பொருட்கள் தடையின்றி கிடைப்பதும், மோதலுக்கு காரணம். பி.டி.ஏ. மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை, மாணவர்கள் மதிப்பதில்லை. உரிய கவுன்சிலிங் அளிக்க வேண்டும். ஆசிரியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என்றனர்.
Namma Madurai
Local News & Updates