Add Listing
மதுரை

மதுரை வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த மதிப்பீட்டுக்குழு

  • 06 Feb 2026
  • 264
  • LOCAL EVENTS

மதுரை வேடசந்தூர் தி.மு.க. எம்.எல்.ஏ. காந்திராஜன் தலைமையிலான தமிழக சட்டசபை மதிப்பீட்டுக்குழு நேற்று மதுரை பகுதி வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தது.

இக்குழு எம்.எல்.ஏ.க்கள் கருமாணிக்கம் (திருவாடானை), சதன்திருமலைக்குமார் (வாசுதேவ நல்லூர்), ராஜா (சங்கரன்கோவில்) ஆகியோருடன் சட்டசபை செயலர் சீனிவாசன், சிறப்பு செயலர் சுப்ரமணியம், துணைச் செயலர் பாலகிருஷ்ணன், கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, நெடுஞ்சாலை உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர். மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டப கல்துாண் பணிகளை ஆய்வு செய்தகுழு, எப்போது முடிந்து கும்பாபிஷே கத்திற்கு தயாராகும் என அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இதையடுத்து கூட்டுறவுத் துறை சார்பில் மொத்த விற்பனை பண்டக சாலையின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், அழகப்பன் நகரில் ரூ.23 லட்சம் மதிப்பில் செக்கு எண்ணெய் உற்பத்தி ஆலை செயல்படுவதை பார்வையிட்டனர். தொடர்ந்து கோரிப்பாளையம் சந்திப்பு மேம்பால பணிகளை பார்வையிட்டனர். கோட்ட பொறியாளர் மோகனகாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் அக்குழுவிடம் விளக்கமளித்தனர். பின்னர் மஸ்தான்பட்டியில் கழிவுநீரேற்று நிலைய கட்டுமான பணிகளை ஆய்வு செய்த குழுவினர், ஒத்தக்கடையில் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலம், கள்ளர் சீரமைப்புத் துறைகளுக்கான 28 சமூகநீதி விடுதிகளில் தங்கி பயிலும் 512 மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல்கூடத்தை பார்வையிட்டனர். அடிப்படை வசதிகள், உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

குழுத் தலைவர் காந்திராஜன் கூறியதாவது மதிப்பீட்டுக்குழு இங்கு நடைபெறும் பணிகள் எந்தளவு முடிந்துள்ளது. அதன் நிலையை என்னவென்று பார்வையிட்டு அரசிடம் அறிக்கை தருவோம். அதன்படி தேவையான நிதி அடுத்த 2026-27 பட்ஜெட்டில் ஒதுக்கப்படும். பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ரூ.199 கோடி மதிப்பில் கோரிப்பாளையத்தில் மேம்பாலம் கட்டுமானம் நடக்கிறது. இதில் 72 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. விரைவில் மீதி பணிகளும் முடிந்து பாலம் திறப்பது குறித்து முதல்வர் முடிவு செய்தபின் அறிவிக்கப்படும். இதேபோல மீனாட்சி அம்மன் கோயிலிலும் வீரவசந்தராயர் மண்டபத்தில் புனரமைப்பில் நுணுக்கமான பணிகள் பழமை மாறாமல் செய்வதால் மெதுவாக நடக்கலாம். விரைவில் இப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேத்திற்கு கோயில் தயாராகும் என்றார்.