மதுரை மாநகராட்சி பட்ஜெட் தாக்கலை கண்டித்து அ.தி.மு.க., வெளிநடப்பு.
- 11 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: மதுரை மாநகராட்சியில் மூன்று மாதங்களுக்கு பின் நடந்த கவுன்சில் கூட்டத்தில் 2026-2027 க்கான பட்ஜெட் தாக்கல் செய்து விவாதம் நடத்த அனுமதிக்காததை கண்டித்து அதி.மு.க. வெளிநடப்பு செய்தது.
சொத்துவரி முறைகேடு வழக்கு எதிரொலியாக மேயராக இருந்த இந்திராணி கடந்த அக்டோபரில் ராஜினாமா செய்தார். அதன் பின் 3 மாதங்களாக கூட்டம் நடக்கவில்லை. உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவால் நேற்று துணைமேயர் நாகராஜன் தலைமையில் கூட்டம் நடந்தது. கமிஷனர் சித்ரா முன்னிலை வகித்தார். மன்றச் செயலாளர் சித்ரா தீர்மானத்தை வாசிக்க ஆரம்பித்த போது, அ.தி.மு.க., எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தை தனியாக ஏன்நடத்தவில்லை. ஒரே நேரத்தில் பட்ஜெட் தாக்கல், விவாதமில்லாத கூட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பல வார்டுகளில் இன்னும் குடிநீர் வரவில்லை. இவற்றை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம் எனக் கூறி அக்கட்சி கவுன்சிலர்கள் வெளியேறினர். இதன்பின் தீர்மானங்களின் எண்களை மட்டும் வாசித்து, இரண்டு நிமிடங்களில் 131 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து 2026 27க்கான மாநகராட்சி பட்ஜெட்டை துணைமேயர் தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, மூர்த்தி, தியாகராஜனுக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் வரவு, செலவு விவரங்களை கூட்டத்தில் தெரிவிக்கவில்லை. கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கூட்ட அறையில் பட்ஜெட் புத்தகத்தை வைத்திருந்த தி.மு.க, காங், கம்யூ, கவுன்சிலர்களும் அதில் என்ன உள்ளது. வரவு, செலவு எவ்வளவு, புதிய திட்டங்கள் என்னென்ன என்பதை கூட பார்க்காமல் சில நொடிகளில் வெளியேறி விட்டனர்.
வி.சி. கவுன்சிலரால் சிரிப்பலை நீதிமன்றம் உத்தரவால் நடத்தப்பட்ட இக்கூட்டம் வழக்கம்போல் அல்லாமல் சில நிமிடங்களில் முடிந்துவிடும் என்ற தகவல் ஆளுங்கட்சி, கூட்டணி கட்சி கவுன்சிலர்களுக்கு முதல் நாளே தகவல் கசிந்துவிட்டது. ஆனால் 71வது வார்டு விடுதலை சிறுத்தை கவுன்சிலர் முனியாண்டிக்கு இத்தகவல் தெரியவில்லை. இதனால் கூட்டம் முடிந்ததாக துணைமேயர் அறிவித்தபோது 'துணைமேயரே, விவாதம் நடக்கலையே. என பரிதாபமாக அவர் கேட்டபோது 'விஷயம் தெரிந்த கவுன்சிலர்கள் சிரித்தனர். பேனருடன் வந்த பா.ஜ. கவுன்சிலர் 36வது வார்டு பா.ஜ. கவுன்சிலர் பூமாஸ்ரீ, மறைத்து கொண்டுவந்த பேனருடன் தரையில் அமர்ந்து, 100 வார்டுகளிலும் இறைச்சி குப்பை சேர்கிறது. அதை நாய்கள் அதிகம் சாப்பிடுகின்றன. அவை கால்நடைகள், மனிதர்களை கடிக்கின்றன. இதுகுறித்து புகார் செய்தும் நடவடிக்கை இல்லை' என கோஷமிட்டார், இதுதொடர்பாக பேனரையும் காட்டி தர்ணா செய்தார். அவரை அவைக் காவலர்கள் அப்புறப்படுத்தினர்.
Add Listing