Add Listing
வேகமெடுக்குது

வேகமெடுக்குது வண்டியூர் பூங்கா சீரமைப்பு பணி: 2026 ஜனவரியில் மக்களுக்காக திறக்கப்படும்!

  • 13 Nov 2025
  • 264
  • LOCAL EVENTS

மதுரையில் கடல் இல்லாத குறையை போக்கும் வகையில், 500 ஏக்கரில் பரந்து விரிந்த வண்டியூர் கண்மாய் சுற்றுப்புறத்தில் உள்ள பூங்கா சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாக மாற உள்ளது. இதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கண்மாயின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் 3 கி.மீ. நீளமான சைக்கிள் பாதை, 3 கி.மீ. நடைப்பயிற்சி பாதை, யோகா மையம், நூலகம், செயற்கை நீரூற்று, குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி ஆம்பிதியேட்டர், உணவகம், ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், பேட்மிண்டன் மைதானம் போன்ற வசதிகள் அமைக்கப்படுகின்றன.

மதுரையில் முதல்முறையாக காற்று நிரப்பிய பைபர் குடுவைகளால் ஆன ‘ப்ளோட்டிங் செட்டி’ எனும் மிதவை நடைபாதை 500 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. நீரில் மிதக்கும் இந்த நீலநிற நடைபாதையை ஆச்சரியத்துடன் பார்ப்பவர்கள், பணிகள் இன்னும் முடிவடையாததால் அனுமதி இல்லை என்பதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். இப்பணிகள் 18 மாதங்களில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், 30 மாதங்களாகியும் இன்னும் முடிவடையவில்லை. சமூக ஆர்வலர் கண்ணன் கூறியதாவது: “மதுரை மக்களின் பொழுதுபோக்கு இடங்களில் முக்கியமானது வண்டியூர் கண்மாய் பூங்கா. இப்பணிகள் 2025 ஜூலைக்குள் முடியும் என எதிர்பார்த்தோம். ஆனால் இன்னும் நிறைவடையாமல் இழுத்துக்கொண்டே செல்கிறது. விரைவில் பணிகளை முடிக்க வேண்டும்,” என்றார்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: “நடைப்பயிற்சி செய்வோருக்கு இடையூறில்லாத வகையில் பணிகள் நடைபெறுகின்றன. தற்போது 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. ‘ப்ளோட்டிங் செட்டி’ நடைபாதை நீரின் அலையோட்டத்திற்கு ஏற்ப இயங்கும் வகையில், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மீது பாதுகாப்புடன் நடந்து செல்ல கைப்பிடிகள் பொருத்தும் பணி விரைவில் தொடங்கும். பூங்காவில் செடி நடுதல், மின் விளக்கு அமைத்தல், ஸ்கேட்டிங் தளம் உள்ளிட்ட எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன. 400 பேர் அமரக்கூடிய திறந்தவெளி தியேட்டரில் கருத்தரங்குகள், கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தலாம். மேலும், கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை, படகு பயணிகளுக்கான லைஃப் ஜாக்கெட், முதலுதவி பெட்டி வைக்கும் அறை, குழந்தைகள் சதுரங்கம், கேரம் போன்ற உள்விளையாட்டு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பணிகள் முழுமையாக முடிந்து, 2026 ஜனவரியில் பூங்கா மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.