புனித லூர்து அன்னை திருத்தல தேர் பவனி! திரளானோர் பங்கேற்பு!
- 17 Feb 2025
- 264
- LOCAL EVENTS
மதுரை கோ.புதூர் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அன்னை யின் ஆடம்பரத் தேர் பவனி.
மதுரை கோ.புதூர் புனித லூர்து அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழா தேர் பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தத் திருத்தலத்தின் 105-ஆம் ஆண்டுப் பெருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, நவநாள் வழிபாடாக தினமும் காலை, மாலையில் மறையுரை, திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான அலங்கார தேர் பவனி சனிக்கிழமை நடைபெற்றது. முதல் நிகழ்வாக பெருவிழா திருப்பலி நடைபெற்றது. மதுரை உயர்மறை மாவட்ட திருத்தூது நிர்வாகி, ஆயர் அந்தோணிசாமி சவரிமுத்து தலைமை வகித்து மறையுரையாற்றி, திருப்பலி நிறைவேற்றினார்.
இதையடுத்து, தஞ்சை மறை மாவட்ட ஆயர் டி. சகாயராஜ் தேர் பவனியைத் தொடங்கி வைத்தார். புனித லூர்து அன்னையின் திருவுருவம் தாங்கிய தேர் முதன்மையான தேராக வலம் வந்தது. இதைத் தொடர்ந்து, மிக்கேல் அதிதூதர், டான்போஸ்கோ, சூசையப்பர் உள்ளிட்ட 4 புனிதர்களின் தேர்கள் வலம் வந்தன. லூர்து அன்னை ஆலய வளாகத்திலிருந்து தொடங்கிய இந்தத் தேர் பவனி சந்தன மாதா தெரு, மாரியம்மன் கோயில் தெரு, மாதா கோயில் முதன்மைச் சாலை, பாரதியார் முதன்மைச் சாலை, அழகர்கோவில் முதன்மைச் சாலை வழியே மீண்டும் ஆலய வளாகத்தை அடைந்தது. இன்னிசை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கையுடன் நடைபெற்ற இந்தத் தேர் பவனியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்