Add Listing
பிப்.10க்குள்

பிப்.10க்குள் மாநகராட்சிக்கு புதிய மேயரை தேர்வு செய்ய முதல்வர் ஓ.கே.,: '69'க்கு '4' தலைமை ஏற்பதா என தி.மு.க., எதிர்ப்பால் முடிவு

  • 02 Feb 2026
  • 264
  • LOCAL EVENTS

மதுரை: மதுரை மாநகராட்சி புதிய மேயரை பிப்.10க்குள் தேர்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் கிரீன் சிக்னல் அளித்துள்ளார். இதனால் மார்க்சிஸ்ட் கட்சியின் துணைமேயர் நாகராஜன் தலைமையில் கவுன்சில் கூட்டம் நடக்க வாய்ப்பில்லை என்பதால் தி.மு.க.,வினர் உற்சாகமாகியுள்ளனர். இம்மாநகராட்சியில் ரூ.150 கோடி சொத்துவரி முறைகேடு விவகாரத்தால் தி.மு.க., மேயராக இருந்த இந்திராணி 2025 அக். 17ல் ராஜினாமா செய்தார். 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழுத் தலைவர்களும் பதவிகளை இழந்தனர்.இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவை, மதுரை அமைச்சர்களில் யாருடைய ஆதரவு கவுன்சிலரை மேயராக தேர்வு செய்வது என்பன போன்ற குழப்பங்களால் புதிய மேயரை இதுவரை தேர்வு செய்ய முடியவில்லை.

மேயர் இல்லாத சூழலில் மார்க்சிஸ்ட் துணைமேயர் நாகராஜன் தலைமையில் கவுன்சில் கூட்டம் நடத்த ஆளுங்கட்சிக்கு 'ஈகோ' தடுத்தது. அதாவது, 69 கவுன்சிலர்களை கொண்டுள்ள ஆளுங்கட்சியை, 4 கவுன்சிலரை வைத்துள்ள மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க., கவுன்சிலர்களும் விரும்பவில்லை. ஆனால் நீதிமன்றத்தின் பொதுநல வழக்கு தி.மு.க.,வுக்கு நெருக்கடி ஏற்படுத்துகிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஜன.30, 31ல் மதுரை வந்த முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு, நீதிமன்ற பொதுநல வழக்கு உத்தரவு, புதிய மேயர் தேர்வு விவகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டன. அதில் புதிய மேயர் தேர்வுக்கு ஸ்டாலின் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டார்.இதுகுறித்து மூத்த தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது: ஆரம்பத்தில் யாருடைய ஆதரவாளரை மேயராக தேர்வு செய்வது என்ற போட்டி அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜனுக்கு இடையே இருந்தது.

தற்போதைய சூழலில் அமைச்சர் மூர்த்தி கை காட்டுபவரையே மேயராக தேர்வு செய்யும் முடிவில் தி.மு.க., தலைமை உள்ளது. ஆனால் துணைமேயருக்கு 'மேயர் பொறுப்பு' (பவர் டெலிகேஷன்) வழங்க தி.மு.க.,வுக்கு மறைமுக நெருக்கடியை மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் சிலர் கொடுத்தனர். இதனால் அமைச்சர் மூர்த்தி அதிருப்தியில் இருந்தார்.இதற்கிடையே சொத்துவரி முறைகேடு வழக்கு விசாரணை இறுதி அறிக்கையும் முடிவுக்கு வந்துள்ளது.இன்னும் தாக்கல் செய்யப்படாத சூழலில், அமைச்சரின் தேர்வு மேயர் தேர்வு பட்டியலில் உள்ளவர்களுக்கு அதில் தொடர்பில்லை என தெரியவந்துள்ளது. சட்டசபை தேர்தல் நேரத்தில் மேயர் இல்லாமல் இருந்தால் அதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கும். துணைமேயர் நாகராஜன் தலைமையில் கூட்டத்தில் பங்கேற்க விருப்பமின்மை, தேர்தல் நேரத்தில் வார்டுக்குள் கவுன்சிலர்கள் தலைகாட்டுவதில் உள்ள சிக்கல் போன்றவை மதுரை இருந்த ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் புதிய மேயர் தேர்வுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் பிப்.10க்குள் மேயர் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு கை கூடியுள்ளது என்றனர்.