சுற்றுலாத்துறை முனைப்பில் வரலாற்றுச் சின்னங்களுக்கு புதிய உயிர் — “இதுதாங்க நம்ம மதுரை”
- 05 Nov 2025
- 264
- LOCAL EVENTS
மதுரையில் கீழமாசி மற்றும் தெற்கு மாசி வீதிகள் சந்திக்கும் இடத்தில் இரும்புத்தூணில் விளக்குகள் ஏற்றப்பட்டதால், அது “விளக்குத்தூண்” என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மாசி வீதி சந்திப்புகளின் பெருமையாக விளங்கிய இந்த விளக்குத்தூண் தற்போது பராமரிப்பின்றி உள்ளது. தூண்களைச் சுற்றி மரக்கன்றுகள் தானாக முளைத்து வளர்கின்றன. இங்கிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் “பத்துத்தூண் சந்து” அமைந்துள்ளது. வரிசையாக பத்தடி இடைவெளியில் நீண்ட கல் தூண்கள் இன்றளவும் கம்பீரமாக நிற்கின்றன. ஒவ்வொரு தூணும் ஐந்தடி சுற்றளவில், 50 அடி உயரத்தில் உருண்டை வடிவில் கட்டப்பட்டுள்ளன. திருமலை நாயக்கர் அரண்மனையின் ஒரு பகுதி “ரங்கவிலாசம்” எனப்படுகிறது. இதில் திருமலை நாயக்கரின் தம்பி முத்தியாலு நாயக்கர் வசித்ததாக கூறப்படுகிறது. அந்த ரங்கவிலாசத்தின் தூண்களே இன்றும் பத்துத்தூண்களாக காணப்படுகின்றன. ரங்கவிலாசத்தின் மற்ற பகுதிகள் தற்போது மறைந்துவிட்டன. இப்போது எஞ்சியுள்ள திருமலை நாயக்கர் அரண்மனை, “மகால்” எனப்படும் சொர்க்கவிலாசமாக திகழ்கிறது. மகாலுக்கு அருகிலேயே பத்துத்தூண்கள் உள்ளன. இவற்றை தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக பராமரித்து வருகிறது.
மேலும், புதுமண்டபத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு, அதை புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் அருகில் பிரமாண்ட நந்தியும், கட்டி முடிக்கப்படாத வேலைப்பாடுகளுடன் கூடிய ராயகோபுரச் சுவரும் உள்ளன. இவற்றை மின்னொளி ஆக்குவதற்கான திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டிருந்தாலும், தற்போது அது கிடப்பில் உள்ளது. இவ்வாறு வரலாற்று மற்றும் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த இத்தகைய சின்னங்களை வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் அறிந்து ரசிக்கும் வகையில் அவற்றை புதுப்பொலிவாக்க சுற்றுலாத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பத்துத்தூண், விளக்குத்தூண், ராயகோபுரம் ஆகிய இடங்களில் மின்விளக்குகள் பொருத்தி, அவற்றை தனித்துவமான அடையாளங்களாக மாற்றும் முயற்சியும் நடைபெறுகிறது. புதுமண்டபத்தில் அறநிலையத் துறையின் அனுமதி பெற்று கலை நிகழ்ச்சிகள் நடத்தவும், மீனாட்சியம்மன் கோயிலின் வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் ‘லேசர் லைட்டிங் ஷோ’ நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதுமண்டபத்திலிருந்து திருமலை நாயக்கர் மகால்வரை பாரம்பரிய நடைபயணம் ஏற்பாடு செய்யப்படும். இதற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்ட பின் பணிகள் தொடங்கப்படும். இந்த அழகுபடுத்தல் பணிகள் நிறைவடைந்தால், மதுரையின் பாரம்பரிய அடையாளம் மீண்டும் வெளியுலகிற்கு பெருமையாகத் தெரிவிக்கும்.
Add Listing