Add Listing
கூடுதல்

கூடுதல் பி.ஜி, பணியிடங்களை நிரப்ப தேர்வர்கள் எதிர்பார்ப்பு டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்குமா?

  • 31 Jan 2026
  • 264
  • LOCAL EVENTS

மதுரை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பி.ஜி. காலி பணியிடங்களை கூடுதல் எண்ணிக்கையில் நிரப்ப வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித் தேர்வு நடத்தி 2025, டிசம்பரில் 1996 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஒவ்வொரு முறையும் அறிவிப்பு வெளியிட்டு, கூடுதல் எண்ணிக்கையிலான பணியிடங்கள் நிரப்பப்படுவது வழக்கம். 2021ல் 2207 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, பின் கூடுதலாக 1030 இடங்கள் அனுமதித்து 3237 இடங்களுக்கு போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் 3043 இடங்கள் நிரப்பப்பட்டன.

கல்வித்துறை நவ,23, 2025 ல் வெளியிட்ட அறிவிப்பில் 3876 பி.ஜி.,ஆசிரியர் பணியிடங்கள் பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் தற்காலிகமாக நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 200 ஆசிரியர் பணியிடங்களுக்கு நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 4500க்கும் மேற்பட்ட பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே இந்தாண்டு 1996 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், மேலும் ஆயிரம் பணியிடங்களை நிரப்ப அனுமதியளிக்க டி.ஆர்.பி, முன்வரவேண்டும். தற்போது தமிழ் தகுதி தேர்வுடன், புதிய பாடத்திட்டத்தின் படி தேர்வு எழுதி சில மதிப்பெண்களில் வாய்ப்பு இழந்த பலர் இதன் மூலம் மீண்டும் பயன்பெறும் வாய்ப்பு கிடைக்கும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஜி.. ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.