Add Listing
மேம்பால

மேம்பால பணிகளால் இடம் மாறும் சிலைகள்: பாலம் திறக்கும் நடவடிக்கைகளால் தாமதம்

  • 05 Feb 2026
  • 264
  • LOCAL EVENTS

மதுரை: மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.196 கோடி செலவில் 2 கி.மீ.க்கும் மேலாக செல்லுார் பகுதிக்கு கிளைப் பாலத்துடன் அமையும் இப்பாலத்தின் 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. இப்பாலத்திற்காக தமுக்கம் பகுதியில் இருந்த சிலைகள், ஸ்தாபி சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. அவற்றை மீண்டும் எங்கு வைப்பது என்பது குறித்து விவாதம் கிளம்பிய நிலையில், இன்னும் இறுதி முடிவுக்கு வராததால் இடம் தேர்வு நடக்கிறது.

அதேசமயம் மேம்பால பணிகளை தேர்தலுக்குள் முடிக்க நெடுஞ்சாலைத்துறை தீவிரம் காட்டுவதால் அப்பணிகள் கிடப்பில் உள்ளன. இப்பாலம் தமுக்கம் முன்பிருந்து துவங்குவதால் அந்த பகுதியில் இருந்த தமிழன்னை சிலையை அகற்ற வேண்டும் என்ற கருத்து உருவானது. ஐகோர்ட்டில் இதுதொடர்பான வழக்கில் சிலையை அகற்றாமல் சற்று நகர்த்தி வைக்க இயலுமா என கேள்வி எழுந்ததால் அதன்படி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதன் அருகிலேயே நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் சிலை இருந்தது. அதை அகற்றி வடக்கு தாலுகா கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதனை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் வைக்கலாம் என கருத்து எழுந்தபோதும், தற்போது மாநகராட்சி நீச்சல் குளம் அருகே உள்ள படிப்பக வளாகத்தில் வைக்க முடிவானது. இன்னும் அங்கு நிறுவவில்லை.

அதேபோல தமுக்கம் முன்பு ரோட்டின் நடுவில் இருந்த தியாகிகள் ஸ்துாபியை எங்கு வைப்பது என்ற கேள்வி எழுந்தது. காந்தி மியூசியத்தில் நிறுவ தியாகிகள் அமைப்பினர் குரல் கொடுத்தனர். தற்போது அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே அமையும் ரவுண்டானா மத்தியில் அமைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் கருதுகிறது. தமுக்கம் எதிரே முன்னாள் பிரதமர் நேருவின் சிலை உள்ளது. அதை மறைத்தவாறு பாலம் அமைவதால் அகற்ற வேண்டிய தேவை உள்ளது. தற்போது அதற்கான இடம் தேடும் நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் காங்கிரஸ் கட்சியினரிடம் கலந்தாலோசித்து வருகின்றனர். அதிகாரிகள் கூறுகையில், 'பிப்.20 அல்லது 21ல் முதல்வர் ஸ்டாலின் கோரிப்பாளையம் மேம்பாலத்தை திறக்க வாய்ப்புள்ளது. விரைவில் நேரு சிலைக்கும் நல்ல இடம் தேர்வு செய்யப்படும்' என்றனர்.