வெளிநாடுகளில் விற்பனையாகும் பழையசோறு சிறுதானிய கருத்தரங்கில் தகவல்
- 26 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: "வெளிநாடுகளில் பழைய சோறு அருமை தெரிந்து அதிக விலைக்கு விற்கின்றனர் என மதுரை கருத்தரங்கில் அண்ணா நிர்வாகப்பணியாளர் கல்லுாரி துணை கலெக்டர் ரங்கசாமி தெரிவித்தார்". வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை சார்பில் நடந்த விவசாயிகள், தொழில்முனைவோர் கருத்தரங்கில் துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி வரவேற்றார். மதுரை அண்ணா நிர்வாகப்பணியாளர் கல்லுாரி துணை கலெக்டர் ரங்கசாமி பேசியதாவது: குக்கர் சாதத்தில் இருந்து விடுபட்டு சாதத்தை வடித்து சாப்பிட வேண்டும். மண்பானையில் சாதம் வடித்து அதில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலை சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும். மதியம் வரை எனர்ஜி தரும். வெளிநாடுகளில் பழைய சோற்றின் அருமை தெரிந்து 200 மில்ல உணவுப்பொருளாக பேக்கிங் செய்து ரூ.400க்கு விற்கின்றனர்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் குழந்தைகளின் அதிக எடைக்கான காரணத்தை ஆய்வு செய்த போது, பிராய்லர் கோழிகளில் அதிக கலோரியுள்ள 'லெக்பீஸ், விங்ஸ்' சாப்பிடுவதே காரணம் என உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கோழி இறைச்சி கடைகளில் 'லெக் பீஸ், விங்ஸ்' விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.துார எறியப்படும் 'லெக் பீஸ், விங்ஸ்' பொரித்த இறைச்சியை கூடுதல் விலை கொடுத்து வாங்கி குளிர்பானத்துடன் சேர்த்து இளையோர் சாப்பிடுகின்றனர். உணவு கலாசாரத்தை மறந்து துரித உணவு, பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் இளையோரின் உடல் எடை அதிகரிப்பதுடன் சிறுமிகள் இளம் வயதில் பூப்படைகின்றனர். தர்மபுரி, கிருஷ்ணகிரி ஓட்டல்களில் ராகி களி உருண்டை முக்கிய உணவாக பரிமாறப்படுகிறது. முன்னோர் கற்றுத்தந்த வழியில் கேழ்வரகு, சோளம், கம்பு, குதிரைவாலி தானியங்களை உண்பது குறித்த விழிப்புணர்வு பெற வேண்டும் என்றார்.
மாநில வேளாண் விற்பனை வாரிய பயற்சி மைய உதவி இயக்குநர் ஜெயமாலா பேசுகையில், 'தமிழகத்தில் மதுரை, விருதுநகர், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலையில் குறு, சிறுதானியங்கள் அதிகளவில் விளைகின்றன. இம்மாவட்ட விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் தரும் தொழில்நுட்பத்தைக் கற்றுத் தருவதுடன் மதிப்புக்கூட்டுதல், சந்தைப்படுத்துதல் குறித்தும் அரசின் சார்பில் 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது உணவு, தங்குமிடம், பயிற்சி இலவசம் என்றார்.மதுரை வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் ஜோதிலட்சுமி, மடீட்சியா பிஐசி. துணை இயக்குநர் ராஜமாணிக்கம், வேளாண் அலுவலர்கள் சித்தார்த் சுந்தரபாண்டியன், அக்மார்க் வேளாண் அலுவலர்கள் மலர்விழி, பாத்திமா கனி பேசினர்
Add Listing