Add Listing
பிப்.

பிப். 24 முதல் பல்வேறு கட்ட போராட்டங்கள்; பல்கலை ஆசிரியர்கள் முடிவு

  • 21 Feb 2026
  • 264
  • LOCAL EVENTS

மதுரை: அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கக்கோரி தொடர் போராட்டம் நடந்து வரும் நிலையில், பிப். 24 முதல் அடுத்தகட்ட போராட்டம் நடத்த பல்கலை ஆசிரியர்கள் சங்கம் (ஏ.யு.டி.), மதுரை காமராஜ், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலை ஆசிரியர்கள் சங்கம் (மூட்டா) முடிவெடுத்துள்ளன.

தமிழகத்தில் உள்ள பல்கலை, கல்லுாரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பணி மேம்பாட்டிற்காக தமிழக உயர்கல்வித்துறை சார்பில் 2021 ஜன. 11ல் அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, அரசுக் கல்லுாரிபேராசிரியர்களுக்கு பணிமேம்பாட்டு ஊதியம், நிலுவைத்தொகையுடன் வழங்கப்பட்டது. மாணவர்கள் பாதிப்பு அரசு உதவிபெறும் கல்லுாரிகளுக்கான 8 மண்டலங்களில் கோவை, தஞ்சை மண்டலங்களில் மேம்பாட்டு ஊதியம் மட்டும் வழங்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட 6 மண்டலங்களில் மேம்பாட்டு ஊதியம், நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இதனால் ஆய்வு மாணவர்களை கூடுதலாக பேராசிரியர்கள் சேர்க்க முடியாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்கள் பி.எச்டி, பெறும் வாய்ப்பை இழந்து வருகின்றனர். ஐந்து ஆண்டுகளாக ஏ.யு.டி. மூட்டா அமைப்புகள் பல போராட்டங்களை நடத்திய நிலையில் உயர்க்கல்வித்துறை அமைச்சகம் சார்பில்பணிமேம்பாடு வழங்கப்படும் என 3 முறை உறுதியளிக்கப்பட்டது. எனினும் இதுவரை பலன்கள் வழங்கப்படவில்லை.

மதுரையில் மூட்டா பொதுச் செயலாளர் செந்தாமரைக் கண்ணன், துணைத் தலைவர் உமா மகேஸ்வரி, ஏ.யூ.டி, பொதுச்செயலாளர் சேவியர் செல்வகுமார் கூறியதாவது: அரசு, அரசு உதவிபெறும் கல்லுாரி எனும் பாகுபாட்டை தவிர்த்து அரசாணைப்படி அனைத்து கல்லுாரி பேராசிரியர்களுக்கும் பணிமேம்பாட்டு ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். இல்லாவிடில் தமிழகம் முழுதும் பிப்.24ல் கல்லுாரி வாயில்கள் முன் மனிதச்சங்கிலி, பிப்.26ல் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் ஆணையின் நகலை திரும்ப வழங்குதல், பிப். 28ல் சாலை மறியல், மார்ச் 5 முதல் சென்னை கல்லுாரி கல்வி இயக்குநர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும். மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் இன்று (பிப்.21) முதல் 3 நாட்கள் அகில இந்திய பல்கலை, கல்லுாரி ஆசிரியர் சங்கம் சார்பில் மாநாடு நடத்தப்படுகிறது. கல்வியாளர்கள், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். உயர்க்கல்வித் துறையில் உள்ள அனைத்து பிரச்னைகள் குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்படும் என்றனர்.