Add Listing
ஊரக

ஊரக வளர்ச்சி அலுவலர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகளை ஏற்று அரசாணை வெளியீடு

  • 14 Feb 2026
  • 264
  • LOCAL EVENTS

மதுரை காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்க வேண்டும். கலைஞர் கனவு இல்லத் திட்டங்களுக்கும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்துதல், ஏழாண்டு பணிமுடித்த மேற்பார்வையளர்களுக்கு இளநிலை பொறியாளர் நிலையில் பதவி உயர்வு வழங்கல் உட்பட 18 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பிப்.10 முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசுச் செயலர் ககன்தீப்சிங்பேடி, இயக்குனர் பொன்னையா நடத்திய பேச்சு வார்த்தையில் சங்கத்தின் மாநில தலைவர் காந்திமதிநாதன், பொதுச் செயலாளர் பிரபு, பொருளாளர் விஜயபாஸ்கர் பங்கேற்றனர். இதில் ஆறு அல்லது ஏழு கோரிக்கைகளை ஏற்று உடனே அரசாணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நேற்று வெளியிடப்பட்ட அரசாணையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் உருவாக்குவது, தற்போதுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடத்தை (வட்டார ஊராட்சி) பெயர் மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலர்கள் கூறுகையில், "ஆறு கோரிக்கைகளுக்கு உடனே அரசாணை பிறப்பிப்பதாக கூறி 2க்கு அரசாணை வெளியிட்டுள்ளனர். மற்ற கோரிக்கைகளுக்கு விரைவில் ஆணை வெளியாகும் என நம்புகிறோம். இதனால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஒத்தி வைத்துள்ளோம்" என்றனர்.