மதுரையில் பெட்ரோல் குண்டு வீசிய பள்ளி மாணவர்கள் 5 பேர் கைது சமூகவலைதளங்களை பார்த்து 'கற்றுக்கொண்டதாக' வாக்குமூலம்
- 05 Feb 2026
- 264
- CRIME & SAFETY NEWS
மதுரை: மதுரையில் சக மாணவர் குறித்து போலீசில் புகார் செய்ததாக ஆத்திரமுற்ற பள்ளி மாணவர்கள் 5 பேர் உட்பட 7 பேர், பெட்ரோல் குண்டு வீசி மிரட்டியதாக கைது செய்யப்பட்டனர். சமூகவலைதளங்களில் வீடியோவை பார்த்து தயாரித்து வீசியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் ஜன, 25 இரவு 3 இடங்களில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் பிப்,2 இரவு ஜீவா நகரில் ஒரு வீட்டருகே உள்ள வேப்ப மரத்தின்மீது பெட்ரோல் குண்டு வீசியதோடு, அப்பகுதி டூவீலர்களை போதையில் சேதப்படுத்தியதாக பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் 5 பேர், படிப்பை பாதியில் நிறுத்திய 15 வயது சிறுவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டனர். அடுத்தடுத்து மதுரை நகரில் பெட்ரோல் குண்டு வீசுவது சர்வசாதாரணமாக நடப்பது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
போலீசார் கூறியதாவது: ஒரு பள்ளி மாணவனின் தாய்க்கும், ஜீவா நகரைச் சேர்ந்த 60 வயது நபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருகுடும்பத்திலும் பிரச்னை ஏற்பட்டது. அந்த நபரை மாணவரும், அவரது நண்பரும் தாக்கியதாக கைது செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமுற்ற சக மாணவர்கள் உட்பட 7 பேர், புகார் கொடுத்த நபரை மிரட்டுவதற்காக டூவீலரில் இருந்து பெட்ரோலை திருடி குவார்ட்டர் பாட்டிலில் ஊற்றி பற்ற வைத்து வீட்டின் மீது வீசியுள்ளனர். அது தவறுதலாக வேப்ப மரம் மீது பட்டு எரிந்தது. கண்காணிப்பு கேமரா அடிப்படையில் மாணவர்களையும், 2 சிறுவர்களையும் கைது செய்தோம். சமூகவலைதளங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வீடியோக்களை பார்த்து தாங்களும் வீச முடிவு செய்ததாகவும், எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவ்வாறு கூறினர்.
Add Listing