Add Listing
கூடல்நகரில்

கூடல்நகரில் கூடுதலாக அமையுமா: மதுரைக்கு இரண்டாவது ரயில் முனையம்

  • 25 Nov 2025
  • 264
  • LOCAL EVENTS

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இடநெருக்கடியை சமாளிக்க புதிதாக ரயில்களை இயக்க கூடல்நகரில் 2வது ரயில் முனையம் அமைவது அவசியம். இதை உணர்ந்து ரயில்வே நிர்வாகம் அங்கு கட்டமைப்புகளை துரித படுத்த வேண்டும். மதுரை ரயில்வே ஸ்டேஷனில் தற்போது ரூ.413 கோடி மதிப்பில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இங்குள்ள 7 பிளாட்பாரங்களில் 7வது பிளாட்பாரம் 'பிட்' லைனுக்கு ரயில்களை கொண்டு செல்லவும் பயன்படுகிறது. மக்கள் தொகை அதிகரிப்பு, ரயில் எண்ணிக்கை அதிகரிப்பால் ஸ்டேஷனில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. யார்டிலும் இடமின்றி ஸ்டேஷனுக்கு வரும் ரயில்கள் பிளாட்பாரத்திலேயே நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்படுவதால் ஒரே பிளாட்பாரத்தில் எதிரெதிர் திசையில் பயணிக்கும் ரயில்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் கடைசி நிமிடங்களில் வரும் பயணிகள், ரயில் மாறி ஏறுவதும், ரயில்களை தவற விடுவதும் தொடர்கதையாகிறது.

இரவில் மதுரை வழியாக செல்லும் விரைவு ரயில்கள் வரிசை கட்டி வருகையில் ஸ்டேஷனுக்கு வெளியே நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் நிலையுள்ளது. இதை பயன்படுத்தி திருட்டும் நடக்கிறது. கடந்த மாதம் தெற்கு ரயில்வேயின் மண்டல ஆலோசனை கூட்டத்தில் மதுரைக்கு புதிய ரயில்களை இயக்குவது, ரயில்களை நீட்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. அதற்கு 'அங்கு போதிய டெர்மினல் வசதி இல்லை' எனக்கூறி அதிகாரிகள் நிராகரித்தனர். இதனால் கூடல்நகரில் 2வது டெர்மினல் அமைப்பது அவசியமாகிறது.

புதிய முனையம் ரயில்வே நிர்வாகம் நினைத்தால் கூடல்நகரில் புதிய முனையம் அமைக்கலாம். அம்ரித் திட்டத்தின் கீழ் கூடல்நகர் ஸ்டேஷனையும் மறுசீரமைப்பு செய்யலாம். பஸ்கள் வந்து செல்லும் வகையில் ரோடு விரிவாக்கம், தெருவிளக்குகள், பார்க்கிங் வசதி ஏற்படுத்தலாம். கூடுதல் பிளாட்பாரங்கள், பிட் லைன்கள் அமைத்து புதிய டெர்மினல் உருவாக்க வேண்டும். அப்போது தான் கூடுதல் ரயில்களை இயக்க, ரயில்களுக்கு நிறுத்தங்கள் வழங்க முடியும். பரவை, ஆனையூர், செல்லுார், பீ.பி.குளம் என வைகையின் வடக்கு பகுதியில் உள்ளவர்கள் மதுரை ஸ்டேஷன் வராமல் இங்கேயே எளிதில் ரயில் ஏறவும் முடியும். ஓரிரு ஆண்டுகளுக்கு முன் ரயில்வே ஸ்டேஷன் பராமரிப்பு பணிக்காக முதலிரண்டு பிளாட்பாரங்கள் மூடப்பட்ட போது, பாண்டியன் உள்ளிட்ட ரயில்கள் கூடல்நகரில் இருந்து இயக்கப்பட்டது வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.