Add Listing
மதுரையில்

மதுரையில் 1200 எக்டேர் பரப்பளவில் சாகுபடி 'ஆர்கானிக்' மயம் நஞ்சில்லா வேளாண், தோட்டக்கலை பயிர்கள்

  • 20 Nov 2025
  • 264
  • LOCAL EVENTS

மதுரை, விதைச்சான்று, உயிர்மச்சான்றளிப்பு துறையின் கீழ் மாவட்டத்தில் இருவேறு திட்டங்களின் கீழ் 1204 எக்டேர் வேளாண், தோட்டக்கலை பயிர்கள் ஆர்கானிக்' முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன. இத்துறையில் தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தின் (என்.பி.ஒ.பி.) கீழ் ஆர்கானிக் சாகுபடிக்கான சான்று பெற்றால் விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது. இம்முறையில் 55 விவசாயிகள் மூலம் 281 எக்டேர் பரப்பளவில் பாரம்பரிய நெல், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியாகின்றன. மேலுார், சேடப்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட விவசாயக் குழுக்கள் மூலம் 305 விவசாயிகள் ஒருங்கிணைந்து 225 எக்டேரில் ஆர்கானிக் சாகுபடி செய்கின்றனர். தொடர்ந்து மூன்றாண்டுகளுக்கு ஆர்கானிக் சாகுபடி செய்வதை கண்காணித்த பிறகு 'இந்தியா ஆர்கானிக் லோகோ வழங்கப்படுகிறது. இம்முறையில் 30 விவசாயிகள் 232 எக்டேர் பரப்பளவில் முழுமையான ஆர்கானிக் மாற்றம் செய்துள்ளனர்.

பங்கேற்பு உத்தரவாத திட்டத்தின் (பி.ஜி.எஸ்.) கீழ் விவசாயக் குழுக்களில் ஒருங்கிணைந்து ஆர்கானிக் சாகுபடி செய்யலாம். இதற்கு முதலாண்டில் சான்றிதழ் கட்டணம் இல்லை. நம்பிக்கையின் அடிப்படையில் பரஸ்பரமாக அடுத்தடுத்த குழுக்களில் உள்ள விவசாயிகள் ஆர்கானிக் வயல்களுக்குச் சென்று ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குகின்றனர். இந்த முறையில் வேளாண் துறையில் 24 குழுக்களில் 524 விவசாயிகள் இணைந்து 514 எக்டேர் பரப்பிலும் 15 தோட்டக்கலை குழுக்களில் 148 விவசாயிகள் இணைந்து 184 எக்டேர் பரப்பில் ஆர்கானிக் சாகுபடி செய்கின்றனர். இருவேறு திட்டங்களின் கீழ் மதுரையில் மொத்தமாக 1204 எக்டேரில் ஆர்கானிக் முறையில் நஞ்சிலா நெல், காய்கறி, பிற பயிர்கள் சாகுபடியாகின்றன.

துறையின் உதவி இயக்குநர் மகாலட்சுமி கூறியதாவது மண்ணின் கரிமச்சத்தை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். ஆர்கானிக் சான்றிதழ் என்பது மண்ணுக்காக தரப்படுகிறது. அந்த மண்ணில் விளைந்த காய்கறி, பழங்களை நஞ்சில்லாமல் உள்ளதா என்று பரிசோதித்து சான்றிதழ் வழங்குகிறோம். ஆர்கானிக் நிலமாக மாற்ற விரும்பினால் முதலில் அங்குள்ள மண், பாசனநீர்ப் பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கேற்ப இயற்கை இடுபொருட்களை இட்டு மண்ணின் சத்துகளை அதிகரிக்க வேண்டும். ஜெய்விக் பாரத் எனும் மத்திய அரசின் இணையதளத்தில் இயற்கை இடுபொருட்களை வாங்கலாம், விளைபொருட்களை விற்கலாம் என்றார். இயற்கைக்கு மாற விரும்பினால் மதுரை வேளாண் இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்றளிப்பு துறையை அணுகலாம்.