Add Listing
மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர் சிலை விற்பனை முயற்சி: இருவர் போலீசாரால் கைது

  • 13 Oct 2025
  • 264
  • CRIME & SAFETY NEWS

உசிலம்பட்டி அருகே கோவிலில் திருடப்பட்ட மாணிக்கவாசகர் சிலையை விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில், சிலை கடத்தல் நடைபெறுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, திருநெல்வேலி சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் வனிதாராணி தலைமையில் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்ததில், ஒரு அடி உயரம் மற்றும் சுமார் 3 கிலோ எடையுடைய மாணிக்கவாசகர் உலோக சிலை பைக்கில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், உசிலம்பட்டி வெள்ளிக்காரப்பட்டியைச் சேர்ந்த காசிமாயன் (43) தன் கூட்டாளிகள் சோலை, வேல்முருகன், மதன் ஆகியோருடன் இணைந்து ஆனையூர் மீனாட்சி கோவிலில் இருந்து சிலையை திருடியதாக தெரியவந்தது.

அதனை பாப்பாபட்டியைச் சேர்ந்த தவசி (65) என்ற நபருடன் சேர்ந்து விற்பனை செய்ய முயன்றபோது போலீசாரால் சிக்கினர். பின்னர் காசிமாயன் மற்றும் தவசி ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிலை பறிமுதல் செய்யப்பட்டது. திருடப்பட்ட சிலையை வாங்க வந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.