Add Listing
மதுரையில்

மதுரையில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு

  • 15 Feb 2025
  • 264
  • LOCAL EVENTS

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் சிங் ஆய்வு செய்தார்.இந்த ஸ்டேஷனை ரூ.347.47 கோடியில் புதுப்பிக்கும் பணி 2022ல் துவங்கியது. கிழக்கு, மேற்கு பகுதிகளில் புதிய டெர்மினல்கள், பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஸ்டேஷன் வர சுரங்கப்பாதை, பார்சல்களுக்கான பிரத்யேக பாலம், கிழக்கில் பார்க்கிங் பகுதியை இணைக்கும் இரு உயர்மட்ட பாதைகள், 7 பிளாட்பாரங்களையும் இணைக்கும் புதிய உயர்மட்ட பாதை உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன. மேற்கில் ஒன்று, கிழக்கில் இரண்டு பல்லடுக்கு பார்க்கிங் கட்டடங்கள் அமைகின்றன. கிழக்கில் உள்ள கார் பார்க்கிங்கில் 244 நான்கு சக்கர வாகனங்கள், டூவீலர் பார்க்கிங்கில் 451 டூவீலர்கள், கூடுதலாக தரை தளத்தில் 700 டூவீலர்கள் நிறுத்தும் வகையிலும், மேற்கில் உள்ள கார் பார்க்கிங்கில் 61 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் அமைக்கப்படவுள்ளன.

2025 நவம்பருக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 30 சதவீத பணிகள் முடிந்துள்ளன. கிழக்கு டெர்மினலின் தரைதளப் பணிகள் முடிந்து பொருட்கள் வைப்பு, துணை ஸ்டேஷன் மாஸ்டர், ஐ.ஆர்.சி.டி.சி., உள்ளிட்ட அறைகள் செயல்படுகின்றன. கிழக்கு பல்லடுக்கு கார் பார்க்கிங் பணி 50 சதவீதம் முடிந்துள்ளது. மேற்கு பல்லடுக்கு கார் பார்க்கிங் பணி முடிந்து வர்ணம் தீட்டப்படுகிறது.

இப்பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் சிங் ஆய்வு செய்தார். கட்டுமான பிரிவு துணை தலைமை பொறியாளர் ஞானசேகர் பணிகளை விளக்கினார். கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா, பொறியாளர்கள், கட்டுமான நிறுவனத்தினர் உடன் சென்றனர்.