மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ராணுவ வீரர்கள் முற்றுகை
- 30 Jan 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: கள்ளிக்குடி பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளை ரத்து செய்ய வலியுறுத்தி ராணுவத்தினர் முற்றுகையிட்டனர்.
கள்ளிக்குடி பகுதியில் கல்லணை, அச்சங்குளம், தூம்பக்குளம் புதுார், நெடுங்குளம், உலகாணி பகுதியில் கல்குவாரிகள் அரசு புறம்போக்கு நிலங்களில் செயல்படுகின்றன. அச்சங்குளத்தில் தனியாரிடம் இருந்து மீட்டு கிராம நிலக்கணக்கு பதிவேட்டில் கோயில் நிலங்களாக மாற்றியும், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். மேலும் பஞ்சமர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் சட்ட விரோதமாக கிரஷர், குவாரி செயல்படுகிறது. இதை ரத்து செய்ய வேண்டும். சட்டவிரோத குவாரிகளுக்கு ஆற்றின் ஊடே சாலைகள் அமைத்து வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் மழை பெய்தும் குண்டாற்றில் பத்து ஆண்டுகளாக தண்ணீர் இல்லை.
இதுபோன்ற காரணங்களுக்காக கிராமத்தினர் பலமுறை போராட்டங்களை நடத்தினர். இவ்வாறு போராட்டம் நடத்தியும் பலனில்லை என்று கூறி நேற்று அக்கிராமங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பலர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்களும் தங்கள் பங்கிற்கு வாயில் கறுப்புத் துணியை கட்டி வரிசையாக நின்றிருந்தனர். அதிகாரிகள் அவர்களிடம் விசாரித்தபோது, பல்வேறு பகுதியில் பணியாற்றும் தாங்கள் இப்பிரச்னைக்காகவே விடுப்பு எடுத்து கலெக்டர் அலுவலகம் வந்துள்ளதாக தெரிவித்தனர். அவர்களும் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டுச் சென்றனர்.
Add Listing