மதுரையில் பொழுதுபோக்குடன் பல்நோக்கு மியூசியம்!
- 14 Feb 2026
- 264
- CULTURE&HERITAGE
மதுரை மதுரையில் பாண்டிய பேரரசின் வரலாற்று சிறப்புகளையும், கடல் கடந்த வணிக தொடர்புகளையும் மக்களுக்கு தெரிவிக்க பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல்நோக்கு மியூசியம் அமைக்க அரசு முன்வர வேண்டும். மதுரையை மையமாக வைத்து தென்மாவட்டங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
ஆண்டுக்கு 25 லட்சம் பேர் வரை வருகின்றனர். ஆனால் மதுரையில் அரசு மியூசியம், காந்தி மியூசியம், சங்க தமிழர் காட்சிக்கூடம், ஜல்லிக்கட்டு மியூசியம் தவிர வேறு பொழுதுபோக்கும் இடங்கள் இல்லை. மதுரையை ஆண்ட பாண்டியர்களின் சிறப்புகள், அவர்களது பெருமைகளை உலகறிய செய்யும் முயற்சியில் சில அமைப்புகள் ஈடுபட்டு வரும் நிலையில் பாண்டிய பேரரசின் வரலாற்று சிறப்புகளையும், கடல் கடந்த வணிக தொடர்புகளையும் மக்களுக்கு தெரிவிக்க பொழுதுபோக்கு அம்சங்களுடன் பல்நோக்கு மியூசியம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை மத்திய சிறை மேலூர் அருகே செம்பூருக்கு இடமாற உள்ளது. இந்த இடத்தை செம்மொழிப் பூங்காவாக மாற்ற மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதேசமயம் பொழுதுபோக்கும் இடமாக மாற்றப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்திருந்தார். நகரின் மத்தியில் உள்ள இச்சிறையில் பாண்டியர் சிறப்புகளை கூறும் பல்நோக்கு மியூசியம் அமைக்கலாம். பாண்டியர் காலம் முதல் நாயக்கர் மன்னர்கள் வரை ஆட்சி செய்தவர்கள் குறித்து லேசர் ஒளி ஒலிக்காட்சி அமைக்கலாம். குழந்தைகளின் பிரிவில் தொழில்நுட்பம், விஞ்ஞானம் சார்ந்தும் அமைக்கலாம். கலைக்கூடத்தில் உள்ளூர் கலைஞர்கள் உதவியுடன் பாண்டியர்களின் வீரத்தையும், விவேகத்தையும் ஓவியமாக காட்சிப்படுத்துவதன் மூலம் சுற்றுலாப்பயணிகளை எளிதில் கவரலாம்.
கலைப்பண்பாட்டுத்துறை முன்னாள் உதவி இயக்குநர் சுலைமான் கூறியதாவது: மதுரைவாசிகளுக்கே பாண்டியர்கள் பற்றி தெரியாத நிலை தான் உள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபத்தில், ஒவ்வொரு சிலைக்கும் பின்பும் ஒரு வரலாறு உள்ளது. இது யாருக்கும் தெரிவதில்லை. பிரிட்டிஷ் காலத்திலேயே பாண்டியர்களின் ஆவணங்கள் கணிசமான அளவு அழிந்து விட்டன. தற்போது அழியும் தருவாயில் உள்ள ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். தமிழரின் பெருமை மதுரை உட்கட்டமைப்பு வளர்ச்சி குழும தலைவர் பாலமுருகன் கூறியதாவது: கிரேக்கர்கள், மெசபடோமியா.என பாண்டியர்களின் வரலாற்றுத்தொடர்பு நீண்டுகொண்டே செல்கிறது. கீழக்குயில்குடி பகுதியில் பாண்டியர் பல்நோக்கு மியூசியம் அமைக்கலாம். தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதி என்பதால், கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளையும் கவர முடியும். மதுரையின் அழகை கழுகுபார்வையில் பார்க்கும் வசதியை ஏற்படுத்தினால் அது சுற்றுலா பயணிகளுக்கு பரவசமாக இருக்கும். இத்திட்டத்தை சுற்றுலாத்துறை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தினால் தமிழரின் பெருமை உலகெங்கும் செல்லும் என்றார்.
Add Listing