Add Listing
தகவல்

தகவல் அறியும் உரிமை சட்டத்தை மறுபரிசீலனை செய்ய பரிந்துரைத்தது ஏன் தேசிய பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் விளக்கம்

  • 17 Feb 2026
  • 264
  • LOCAL EVENTS

மதுரை தேசிய பொருளாதார ஆய்வறிக்கையில் ஆர்.டி.ஐ. சட்டத்தை மறுபரிசீலனை செய்ய பரிந்துரை செய்தது, அச்சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்காக அல்ல, அதன் அடிப்படை கட்டமைப்புகளைச் சிதைக்காமல் அரசின் வெளிப்படைத்தன்மைக்கும் சிறந்த நிர்வாகத்திற்கும் இடையே சமநிலையை உருவாக்குவதற்கேஎன தேசிய பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.

அனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழு 2026 பொருளாதார ஆய்வறிக்கையில், 2005 ல் கொண்டுவரப்பட்ட ஆர்.டி ஐ. சட்டத்தில், சில மாற்றங்களை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்திருந்தது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல கருத்துக்கள் எழுந்து வருகின்றன. இதுபற்றி அதிகாரிகள் கூறுகையில், 'சிலர் தங்களின் தனிப்பட்ட பழிவாங்கல், அதிகாரிகளை பயமுறுத்தவதற்காக இச்சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். அலுவலகங்களில் அதிகளவில் ஆர்.டி.ஐ. விண்ணப்பங்கள் வரும்போது, பணிச்சுமை அதிகரித்து மனஉளைச்சலுக்கு ஆளாகிறோம். இதனால் அரசு இயந்திரம் பாதிப்படைவது உண்மை. ஆர்.டி.ஐ, சட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு மறுசீரமைப்பு செய்வது அவசியம்'என்றனர். மதுரையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ. ஆர்வலர் தினகரன் கூறுகையில், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் இடப் பற்றாக்குறையால், 2017 ல் காலி செய்யப்பட்டது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் நிர்வாகத்திடம் கேட்டபோது, 50 லட்சம் ரூபாய் வாடகை பாக்கிசெலுத்தவில்லை என்ற விபரம் தெரியவந்தது. இது போன்ற பல்வேறு முக்கிய தகவல்கள் ஆர்.டி.ஐ. மூலம் பொதுவெளிக்கு வந்துள்ளன. ஆனால் பெரும்பாலான நேரங்களில் மழுப்பலான பதில்களை அதிகாரிகள் தருகின்றனர். மேல்முறையீடு செய்தாலும் பயன் இல்லை. ஆர்.டி.ஐ,மறுசீரமைப்பு செய்வதற்கு பதிலாக, அதிகாரிகள் புரியும்படி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும்' என்றார்.

கடந்த 20 ஆண்டுகளாக அமலில் உள்ள ஆர்.டி.ஐ. சட்டத்தால் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. ஆனால் இந்திய ஆர்.டி.ஐ. சட்டத்தின் எல்லை வரம்பு அதிகமாக உள்ளது. இதனால், அரசு நிர்வாகத்தின் ரகசிய ஆலோசனைகளுக்குப் போதிய இடம் கிடைப்பதில்லை. பொருளாதார ஆய்வறிக்கையின் 16-வது அத்தியாயத்தில் (பகுதி 2) குறிப்பிட்டபடி. வரைவு குறிப்புகள், அதிகாரிகள் தெரிவிக்கும் தனிப்பட்ட கருத்துக்கள், விவாதங்களின் விவரங்கள் போன்றவை பெரும்பாலும் பொதுவெளியில் பகிரப்படுகின்றன. என்பதைக் குறிப்பிட்டுள்ளோம். பெரும்பாலான நேரங்களில் பொதுநலன் குறைவாக இருந்தாலும் கூட இத்தகைய விவரங்கள் ஆர்.டி.ஐ. மூலம் தரப்படுகின்றன. ஆரம்பகட்ட விவாதங்கள் அனைத்தும் வெளியே தெரிவதால், அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகின்றனர். இது அரசின் தரம் வாய்ந்த கொள்கை உருவாக்கத்தைப் பாதிக்கலாம் என்ற கவலை எழுந்துள்ளது. ஆர்.டி.ஐ. சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புகளான ஊழல் எதிர்ப்பு. ஜனநாயகப் பண்புகளைச் சிதைக்காத வகையில், அரசின் வெளிப்படைத்தன்மைக்கும் சிறந்த நிர்வாகத்திற்கும் இடையே சமநிலையை உருவாக்குவதே நோக்கம். இவ்வாறு கூறினார்.