Add Listing
நவம்பர்

நவம்பர் 4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் – வீடுவீடாகச் சென்று ஆவணங்கள் சரிபார்க்கும் 3,050 ஓட்டுச்சாவடி அலுவலர்கள்

  • 30 Oct 2025
  • 264
  • LOCAL EVENTS

மதுரை: மதுரை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறுகிறது. இந்த பணியில் மொத்தம் 3,050 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் (பி.எல்.ஓ.,க்கள்) வீடுவீடாகச் சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்க உள்ளனர். மதுரை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன; அவற்றில் 3,082 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. மொத்தம் சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதேபோன்ற திருத்தம் கடைசியாக 2002-ல் நடைபெற்றது; தற்போது மீண்டும் இந்த சிறப்பு திருத்தம் நடை பெறுகிறது.

நகர்ப்பகுதிகளில் 2005 வாக்காளர் பட்டியல் மற்றும் ஊரகப் பகுதிகளில் 2002 பட்டியல் அடிப்படையாக கொண்டு இந்த பணி நடைபெறும். பி.எல்.ஓ.,க்கள் வீடுவீடாகச் சென்று புதிய சேர்க்கைகள், பெயர் நீக்கம் அல்லது திருத்தம் தேவையுள்ள விவரங்களை பதிவு செய்வர். ஒவ்வொரு 10 பி.எல்.ஓ.,க்களுக்கும் ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் துறை உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் இதற்கான பொறுப்பில் உள்ளனர். வீடுகளுக்குச் செல்லும் போது, வாக்காளர் விவரங்கள் உறுதிப்படுத்த ஆதார், பிறப்பு சான்று, வீட்டுவரி ரசீது உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்கலாம். புதிய சேர்க்கை, திருத்தம், நீக்கம் ஆகியவற்றுக்கான படிவங்களையும் வீடுகளில் வழங்கி, ஒரு வாரம் கழித்து அதே அலுவலர்கள் மீண்டும் வந்து கையொப்பத்துடன் பெற்றுக்கொள்வர்.

வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 அன்று வெளியிடப்படும். அதில் திருத்தங்கள் அல்லது ஆட்சேபனைகள் இருந்தால் ஜனவரி 8 வரை அளிக்கலாம். அவை ஜனவரி 31 வரை சரிபார்க்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும். இந்த சிறப்பு திருத்தப்பணிக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பிரவீன் குமார் தலைமையில், நேர்முக உதவியாளர் ரங்கநாதன், ஆர்.டி.ஓ.,க்கள், தாசில்தார்கள் உள்ளிட்ட வருவாய் அதிகாரிகள் ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருகின்றனர்.