கொள்முதல் மையத்தில் தேங்கிய நெல்மூடைகள்
- 18 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: மதுரை கிழக்கு ஒன்றியம் கார்சேரியில் 15 நாட்களுக்கு முன் துவங்கப்பட்ட அரசு நெல் கொள்முதல் மையத்தில் விவசாயிகள் அறுவடை நெல்லை விற்று வருகின்றனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் சார்பில் 7 லோடு நெல்மூடைகள் கொள்முதல் செய்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதன்பின் மூடைகளை அடுக்கி வைத்துள்ளனரே தவிர, எடுத்துச் செல்லவில்லை.
விவசாயிகளின் நெல்லை எடைபோட்டு சிப்பமாக மாற்றி வைப்பதால், இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இவ்வாறு 9 லோடுக்கும் கூடுதலாக நெல்மூடைகள் தேங்கி இருப்பதால் எடைபோடும் பணி பாதிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து புகார் தெரிவிக்க கலெக்டர், நுகர்பொருள் வாணிபகழக மண்டல மேலாளரை சந்திக்க முடியவில்லை என்ற விவசாயிகள் நேற்று மீண்டும் கலெக்டர் அலுவலகம் வந்தனர். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் அழகு சேர்வை, மாவட்டத் தலைவர் மணிகண்டன். நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் குணசேகரன், ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் மனுகொடுக்க வந்தனர்.
அவர்கள் கூறுகையில், 'மாவட்டத்தில் பெரும்பாலான கொள்முதல் மையங்களில் மூடைகள் தேங்கியுள்ளன. இடப்பற்றாக்குறையால் புதிதாக எடைபோட இயலவில்லை. விவசாயிகள் நெல்லை விற்கவும் இயலவில்லை. மழை வந்தால் மூடைகள் பாதிக்கும். இதற்கு தீர்வில்லையெனில் போராட்டம் நடத்துவோம்" என்றனர்.
Add Listing