தட்டில் வரும் காணிக்கை அர்ச்சகருக்கா? அரசுக்கா? மதுரை ஈஓ அறிக்கையால் வந்த சர்ச்சை! பறந்த விளக்கம்!
- 12 Feb 2025
- 264
- LOCAL EVENTS
மதுரை: கோவிலில் பக்தர்கள் தட்டில் செலுத்தும் காணிக்கை பணத்தை உண்டியலில் போட வேண்டும் எனவும் அந்த காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது எனவும் மதுரை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் அனுப்பிய சுற்றறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் ஏராளமான கோவில்கள் செயல்பட்டு வருகிறது. வடபழனி முருகன் கோவில், பழனி முருகன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் போன்ற பெரிய அளவிலான கோவில்களும் சில இடங்களில் சிறிய அளவிலான கோவில்களும் இருக்கிறது
ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவு வருமானம் கொண்ட கோயில்களை தமிழ்நாடு அரசே இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருகிறது. அந்த கோவிலுக்கான வருமானம், அன்னதானம், கோவில் பராமரிப்பு பணி, ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. மேலும் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக கோவில்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. அன்னதானம் உண்டியல், ஆன்லைன் மூலமும் பக்தர்கள் தங்கள் காணிக்கையை செலுத்தலாம். மேலும் கோவிலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அந்த காணிக்கையை அர்ச்சகர்களே வைத்துக் கொள்வார்கள். இந்த நிலையில் தான் அதனை வைத்து புதிய சர்ச்சை ஒன்று வெடித்திருக்கிறது. மதுரை நேதாஜி சாலையில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இதில் மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் செல்வது வழக்கம். அவ்வாறு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது காணிக்கையை அர்ச்சனை தட்டில் செலுத்துகிறார்கள். இந்த நிலையில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக் கூடாது என்றும் உடனுக்குடன் அவற்றை உண்டியலில் செலுத்த வேண்டும் என கோவில் செயல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார்.