Add Listing
மாவட்டத்திற்கு

மாவட்டத்திற்கு ஒரு ஆயுஷ் மையம்

  • 15 Nov 2025
  • 264
  • HEALTH NEWS

மதுரை: "தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலை அமைப்பதற்கு இழுபறி நிலவும் நிலையில், மாவட்டத்திற்கு ஒரு ஆயுஷ் மையம் அமைப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்' என ஆயுஷ் டாக்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சித்தமருத்துவத்தின் ஆதியிடம் தமிழகம் என்றாலும் அனைத்து மாவட்டங்களிலும் படுக்கை வசதியுடன் கூடிய சித்தாவை உள்ளடக்கிய ஆயுஷ் மையம் அமைப்பது அவசியம் என்கின்றனர் சித்தா டாக்டர்கள். அவர்கள் கூறியதாவது: அந்தந்த மாவட்ட அரசு மருத்துவமனை, தலைமை மருத்துவமனைகளில் சித்த மருத்துவப் பிரிவுகள் புறநோயாளிகள் பிரிவாகவே செயல்படுகின்றன.கிராமப்புறங்களில் சித்த மருத்துவப் பிரிவுகள் செயல்பட்டாலும் மாநகராட்சிகளில் சித்த மருத்துவப் பிரிவுகள் குறைவாக உள்ளன.தமிழகத்தில் சில மாநகராட்சிகளில் தான் சித்தா டாக்டர்கள் உள்ளனர்.படுக்கை வசதி தேவை: தமிழகத்தில் சேலம், தேனி மாவட்டங்களில் படுக்கை வசதிகளுடன் கூடிய சித்த மருத்துவப் பிரிவு செயல்படுகிறது. நாமக்கல் கொல்லிமலை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

அதுபோன்று படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் மீதியுள்ள 35 மாவட்டங்களில் இல்லை.புறநோயாளிகள் பிரிவு செயல்படுவது பெரிய விஷயமில்லை.நீண்டநாள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கு வசதியில்லாத நிலையே உள்ளது. ஆயுஷ் மையம் தேவை: பக்கவாத நோயாளிகள், ஆட்டிசம் சிறப்பு குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சோரியாசிஸ், சர்க்கரை நோய் ஆறாத புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளிகளுக்கு நீண்டநாள் சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கு தினந்தோறும் புறநோயாளியாக வந்து சிகிச்சை பெறுவது இயலாத விஷயம். ஆட்டிசம் சிறப்பு குழந்தைகள், மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு கை, கால் ஒத்துழைக்காத குழந்தைகளுக்கு தினந்தோறும் மசாஜ் சிகிச்சை அளிக்க வேண்டும். நீண்டநாட்கள் தொடர் சிகிச்சை தேவை. தினமும் புறநோயாளியாக வந்து செல்வது சிரமம். இதற்கான ஒரே தீர்வு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயுஷ் மருத்துவமனை அமைப்பது தான். ஆயுர்வேதா, யுனானி, யோகா நேச்சுரோபதி, சித்தா, ஹோமியோபதி என ஐந்து துறைகளுக்கும் தலா 10 படுக்கைகள் வீதம் மாவட்டத்திற்கு குறைந்தது 50 படுக்கைகளுடன் கூடிய ஆயுஷ் மையம் அமைக்க வேண்டும் என்றனர்.