சூரபத்மனை சம்ஹாரம் செய்த சுப்பிரமணிய சுவாமி குன்றத்தில் இன்று தேரோட்டம்
- 28 Oct 2025
- 264
- CULTURE&HERITAGE
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நேற்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது. இன்று (அக். 28) காலை சுவாமி தேரோட்டம் நடைபெறுகிறது. அக். 22 முதல் நடைபெற்ற யாகசாலை பூஜைகள் நேற்று காலை நிறைவடைந்தன. தங்கம், வெள்ளிக் குடங்களில் வைக்கப்பட்டிருந்த புனித நீர் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
உச்சிகால பூஜைக்கு பின் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி சம்ஹார அலங்காரத்தில் தங்க மயில் வாகனத்திலும், வீரபாகுதேவர் வெள்ளைக் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி வீதிகளில் உலா வந்தனர். அதன்பின் உருவம் மாறிய சூரபத்மனை வீரபாகுதேவர் விரட்டி செல்ல, சிவாச்சாரியார் சுப்பிரமணிய சுவாமியின் பிரதிநிதியாக வாள் ஏந்திச் சென்றார். பின்னர் சுவாமி வேலுடன் சூரனை எட்டு திசைகளிலும் விரட்டி சம்ஹாரம் செய்தார். யானைமுகம், சிங்கமுகம், ஆட்டுத்தலை உள்ளிட்ட பல்வேறு உருவங்களில் சூரபத்மன் மாறி மாறி வந்த நிலையில், இறுதியில் சுவாமி சம்ஹாரம் நிகழ்த்தினார்.
பின்னர் சொக்கநாதர் கோயில் முன்பு சூரசம்ஹார கதை திருவிழா நம்பியார் சங்கர் சிவாச்சாரியார் அவர்களால் பக்தர்களுக்கு விளக்கமாக கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மாலை மாற்றி தீபாராதனை நடைபெற்று, பூச்சப்பரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் உச்சநிலையாக இன்று காலை சட்டத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி கிரிவீதிகள் மற்றும் ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.
Add Listing