Add Listing
ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு வழக்கில் 9 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு! 57 பேரை விடுதலை செய்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்

  • 30 Jan 2026
  • 264
  • LOCAL EVENTS

மதுரை: ஜல்லிக்கட்டு வழக்கில் 57 பேரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு (Jallikattu) ஆதரவாக நடந்த போராட்டத்தின்போது போலீசார் தாக்கப்பட்டதாக பதியப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பெண்கள் உள்பட 57 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. 2017 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி அலங்காநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அலங்காநல்லூர் வாடிவாசலில் ஏராளமானோர் போராடினர். போராட்டக்காரர்கள், 'குறைந்தது 5 கோயில் காளைகளையாவது வாடிவாசல் வழியாக விடுங்கள்; பிறகு நாங்கள் கலைந்து செல்கிறோம்' என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி அரசு தரப்பு மறுத்தது. இதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அப்போது அலங்காநல்லூர் பொதுமக்கள் காவல்துறை நெருக்கடிகளையும் மீறி போராட்டக்காரர்களுக்கு உணவு சமைத்து வழங்கினர். அடுத்த நாள் அதிகாலை, அலங்காநல்லூரை நோக்கி மேலும் பல்லாயிரக்கணக்கானோர் வர தயாராக இருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் இளைஞர்களும் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் வாடிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மெரினா, சேலம், கோயம்புத்தூர், மதுரை என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. போராட்டம் தீவிரம் அடைந்ததால் அன்றைய முதல்வர் ஓ பன்னீர்செல்வம், டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது மத்திய அரசு, 'ஜல்லிக்கட்டு நடத்தும் முடிவை மாநில அரசே எடுக்கலாம்' என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 21.01.2017 அன்று மாநில அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சிறப்பு சட்டத்தை இயற்றியது. ஆனால் அவசரச் சட்டம் வேண்டாம், நிரந்தரச் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் தொடர்ந்தன. அப்போது அலங்காநல்லூரில் போராடிய 63 பேர் கைது செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 2018 முதல் நடந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு வழக்கு முறியடிப்பு மாநாடு மதுரையில் நடந்தது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர், வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். ஆனால், சிபிசிஐடி பதிவு செய்த வழக்குகள் மட்டும் ரத்து செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. இன்று வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மாஜிஸ்திரேட் பாக்யராஜ் முன்பாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகிலன் உள்ளிட்டோர் ஆஜராகினர். ஜல்லிக்கட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பெண்கள் உள்பட 57 பேரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.