Add Listing
ரூட்

ரூட் கிளியர்:மதுரையில் 41 புதிய மினிபஸ் வழித்தடங்களுக்கு அனுமதி: பஸ் சேவை இல்லாத பகுதிகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு

  • 13 Feb 2025
  • 264
  • TRAFFIC&TRANSPORTATION

மதுரை: தமிழகத்தில் புதிய மினிபஸ் விரிவாக்கத் திட்டத்தை செயல்படுத்த அரசு ஆர்வம் காட்டி வருகிறது. மதுரை மாவட்ட நிர்வாகமும் கலெக்டர் சங்கீதா தலைமையில் இதற்கான ஏற்பாட்டில் களம் இறங்கியுள்ளது.

மதுரையில் 3 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ.,) உள்ளன. ஆர்.டி.ஓ., மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மூலம் மாவட்டத்தில் பஸ் சேவை இல்லாத பகுதிகளை கண்டறிந்து வருகின்றனர். இதுவரை மினி பஸ்கள் 20 கி.மீ., வரை சென்று வந்தன. புதிய திட்டத்தில் கூடுதலாக 5 கி.மீ.,க்கு அனுமதி உண்டு. பஸ் புறப்படும் அல்லது முடியும் இடம் நகர்ப்பகுதியாக இருக்க வேண்டும். புதிய வழித்தடத்தில் 65 சதவீதம் பஸ் சேவை இல்லாத பகுதியாக இருக்க வேண்டும். முன்பு நகர்ப்புற பகுதிகள் அனைத்தும் பஸ் சேவை பகுதியாக அறிவித்திருந்தனர். தற்போது நகரிலும் பஸ் சேவை இல்லாத பகுதிக்கு அனுமதி பெறலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.பஸ் வழித்தடத்தில் 25 கி.மீ.,ல் முடியும் பகுதியை அடுத்த ஒரு கி.மீ.,க்குள் பள்ளி, கல்லுாரி, உழவர்சந்தை, பிரபலமான வழிபாட்டு தலங்கள், தாலுகா, மாவட்ட மருத்துவமனைகள் இருந்தால் கலெக்டரின் பரிசீலனைக்குப் பின் அந்த ஒரு கி.மீ.,க்கு சேவையை நீட்டிக்க அனுமதி வழங்கப்படும். இத்தகைய நிபந்தனைகளுடன் புதிய மினி பஸ் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.இதற்காக 41 வழித்தடங்களை ஆர்.டி.ஓ.,க்கள் சிங்காரவேலு, சித்ரா கண்டறிந்துள்ளனர். மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் 250 வழித்தடங்களில் மினிபஸ் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. அவற்றில் 20 சதவீதத்திற்கும் மேலான தடங்களில் பயணிகள் வராதது, ரோடு சரியில்லாதது, ஆப்பரேட்டர்கள் விரும்பாதது என பல காரணங்களால் பஸ் சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய வழித்தடத்தில் பஸ்இயக்க விருப்பமுள்ளோர் 'பாரிவாகன்' இணையதள போர்ட்டல் மூலம் ரூ.1600 கட்டணம் செலுத்தி, பிப்.24க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

புதிய வழித்தடங்கள் மஞ்சம்பட்டி - கள்ளந்திரி - எம்.ஏ.வி.எம்.எம்., கல்லுாரி, வண்டியூர் - வளர்நகர் - ஏ.புதுார், மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்ட் - நரசிங்கம் - பூசாரிபட்டி, மேலுார் அரசு மருத்துவமனை - ஒத்தப்பட்டி - புலிப்பட்டி, மேலுார் தாலுகா அலுவலகம் - கல்லம்பட்டி - கவதாயம்பட்டி, கருங்காலக்குடி - 18 சுக்காம்பட்டி - சொக்கலிங்கபுரம், வெள்ளமலைப்பட்டி - கேசம்பட்டி - கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி - கரியேந்தல்பட்டி - சேக்கிபட்டி முத்தாலம்மன் கோயில், மேலுார் சுந்தரி டவர் - கருத்தம்புளியம்பட்டி 0 அம்பலக்காரன்பட்டி ஒன்றிய அலுவலகம், வாடிப்பட்டி - குட்லாடம்பட்டி சந்திப்பு - டி.மேட்டுப்பட்டி, வாடிப்பட்டி - நாச்சிக்குளம் - அம்மச்சியாபுரம், வாடிப்பட்டி - பாண்டியராஜபுரம் - பொட்டிச்சிபட்டி, மாதாகோயில் - கரட்டுப்பட்டி - முத்துலிங்காபுரம், வாடிப்பட்டி மந்தை திடல் - ராமராஜபுரம் - தெத்துார், திருநகர் ஸ்ரீனிவாசாநகர் - தனக்கன்குளம் - தென்பழஞ்சி, தென்பழஞ்சி - விளாச்சேரி - மன்னர் திருமலைநாயக்கர் கல்லுாரி, பசுமலை - கரடிப்பட்டி - மீனாட்சிபுரம் பிரிவு. வசந்தநகர் - முத்துப்பட்டி - அவனியாபுரம், எம்.கல்லுப்பட்டி - நாகையாபுரம் - பி.அம்மாபட்டி, அழகாபுரி - பாப்பிநாயக்கன்பட்டி - அய்யம்பட்டி, சாப்டூர் - சதுரகிரி - பளியர் காலனி, மேலதிருமாணிக்கம் - வண்ணான்குளம் - சேடப்பட்டி, கோபாலபுரம் காலனி - உத்தப்புரம் - சின்னக்கட்டளை, இ.பெருமாள்பட்டி - எழுமலை - குன்னுவார்பட்டி, பன்னிக்குண்டு - ஏ.வலையபட்டி - திருமங்கலம், பேரையூர் - கிளாங்குளம் - காடனேரி, எஸ்.பெருமாள்பட்டி - அரசப்பட்டி - திருமங்கலம், அய்யனார்புரம் - எம்.கல்லுப்பட்டி - சேடப்பட்டி (ஜம்பலாபுரம் விலக்கு), ஸ்ரீரெங்கபுரம் - கவுண்டன்பட்டி - தொட்டப்பநாயக்கனுார், டி.குமாரம்பட்டி - வடுகப்பட்டி காலனி விலக்கு - தீனா விலக்கு, யு.மாரிபட்டி - கன்னிமார்புரம் - உசிலம்பட்டி தாலுகா அலுவலகம், கோடாங்கி நாயக்கன்பட்டி - ஜோதில்நாயக்கனுார் - எருமார்பட்டி காலனி, லிங்கநாயக்கன்பட்டி - நல்லதேவன்பட்டி - உசிலம்பட்டி அரசு மருத்துவமனை, டி.உச்சபட்டி - திடியன் விலக்கு - சிந்துபட்டி, சி.நாட்டாபட்டி விலக்கு - காக்கிவீரன்பட்டி - உசிலம்பட்டி தாலுகா அலுவலகம், பொம்மனம்பட்டி - வகுரணி - உசிலம்பட்டி அரசு மருத்துவமனை, கூழ்நாயக்கன்பட்டி - கட்டத்தேவன்பட்டி - உசிலம்பட்டி அரசு மருத்துவமனை, வாலாந்துார் - அய்யன்கோயில்பட்டி - ஜோதில்மாணிக்கம், கட்டக்கருப்பன்பட்டி - பொட்டல்பட்டி - தீனா விலக்கு, புல்லனேரி - வீரம்பட்டி - செல்லம்பட்டி, வண்டியூர் - மேலஅனுப்பானடி - பொட்டபாளையம்.