வைகை கரை சாலை பணிக்கு ஆற்றில் மணல் அள்ள தடை
- 13 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: மதுரை வைகை ஆற்றின் வடக்கு கரையில் சாலை அமைக்கும் பணிக்காக, ஆற்றில் மணல் அள்ள, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.
மதுரை, வைகைராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, வைகை ஆற்றின் வடக்கு கரையில், ஆரப்பாளையம் காமராஜர் பாலம் அருகிலிருந்து சமயநல்லுார் நான்குவழிச்சாலை வரை, 8 கி.மீ., துாரம் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் திட்ட மதிப்பு, 165 கோடி ரூபாய். இதற்காக, வைகை ஆற்றின் பெரும்பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக சட்டவிரோதமாக வைகையில் மணல் அள்ளப்படுகிறது. 2019ல் 'ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக, வைகை கரையின் இருபுறமும் சாலை அமைக்கப்பட்டது. இதனால் வைகை அகலம் குறைந்தது.
மணல் அள்ளுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். திட்டத்திற்குரிய நிதியை மணல் கொள்முதலுக்கு பயன்படுத்தவில்லை. நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சாலை அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். வைகையில் சட்டவிரோதமாக மணல் அள்ளியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும். மணல் அள்ளியதற்காக நெடுஞ்சாலைத்துறையிட மிருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும். அதை வைகை மறுசீரமைப்பிற்கு பயன்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் ஜி.ஆர், சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சாலை அமைக்கும் பணிக்கு வைகையிலிருந்து மணல் அள்ள இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விசாரணை பிப், 19க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என்றனர்.
Add Listing