மதுரையில் இன்று முதல்வர் ஸ்டாலின்; ஒரே மேடையில் கூட்டணி கட்சி தலைவர்கள்
- 21 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: மதுரையில் இன்று (பிப்.21) பல்வேறு அரசு திட்டங்களை துவக்கி வைக்க வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், தென் மாவட்டங்களின் ஓட்டுச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்கிறார். ம.நீ.ம., ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் முதல்வருடன் கமல், வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மதுரை விமான நிலையத்திற்கு காலை 10.30 மணிக்கு விமான நிலையம் வரும் முதல்வர் ஸ்டாலின், வடபழஞ்சி எல்காட் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின் கோரிப்பாளையம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை திறக்கிறார். காணொலி மூலம் மருதுபாண்டியர்களின் சிலையை திறக்கிறார். அதன் பின் மீனாட்சி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் கணினி ஆய்வகம் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். மாநகராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகர் சுந்தரம் பூங்கா, புனரமைக்கப்பட்ட வண்டியூர் கண்மாய் திறந்து வைக்கிறார்.
அமைச்சர் மூர்த்தி பேட்டி தி.மு.க. சார்பில் மாலை உத்தங்குடி கலைஞர் திடலில் என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற தலைப்பில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார். இதுகுறித்து அமைச்சர் மூர்த்தி கூறியதாவது: மதுரையில் தென் மண்டலத்தை சேர்ந்த 58 சட்ட சபை தொகுதிகளை சேர்ந்த ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். ஒரு லட்சத்து 98 ஆயிரம் முகவர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பங்கேற்கும் முகவர்களுக்கு கியூ.ஆர், அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. முதல்வருக்கு ரோட்டின் இருபுறமும் நின்று 15 ஆயிரம் மகளிர் உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு மாலை காந்தி மியூசியத்தில் கமல் பண்பாட்டு மையம் சார்பில் நடக்கும் மறவோம்' என்ற காந்தியை நினைவுகூரும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதில் ம.நீ.ம, தலைவர் கமல், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, வி.சி., தலைவர் திருமாவளவன் உட்பட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் பங்கேற்கின்றனர். இரவு 7:30 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
Add Listing