அதிர்ச்சியில் மதுரைக்காரர்கள்.. ஒரு வாரத்தில் இடிக்கப்படும் அம்பிகா தியேட்டர்.. காரணம் என்ன?
- 20 Feb 2025
- 264
- LOCAL EVENTS
மதுரை: சில நாட்களுக்கு முன் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த உதயம் திரையரங்கும் இடிக்கப்பட்டது. அந்த வீடியோவை பகிர்ந்து பலரும் தங்களின் நினைவுகளை பகிர்ந்து வந்தனர். அந்த வகையில் தற்போது மதுரையில் 35 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த அம்பிகா திரையரங்கும் இடிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கடந்த சில ஆண்டுகளாகவே மல்டி பிளக்ஸ் கலாச்சாரம் அதிகரித்தது. அதேபோல் சென்னைக்கு நிகரான வசதிகளை கொண்ட திரையரங்குகள் உருவாகியது. கோபுரம் சினிமாஸ், வெற்றி சினிமாஸ் மாட்டுத்தாவணி, வெற்றி சினிமாஸ் வில்லாபுரம், ரேடியன்ஸ் சினிமாஸ், ஐநாக்ஸ் என்று சிறந்த தரத்துடன் திரையரங்குகளில் உருவாகி வந்தது இதனால் ஒரு ஸ்க்ரீன் அல்லது 2 ஸ்க்ரீன் வைத்து நடத்தப்பட்டு வந்த திரையரங்குகள் ரசிகர்கள் மத்திய பெரிய வரவேற்பை பெறவில்லை. அம்பிகா திரையரங்கில் சமீபத்தில் வெளியான அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தை திரையிட்ட போதும் முதல் நாளிலேயே பெரிய கூட்டம் வரவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அம்பிகா திரையரங்கின் சூழல் இப்படிதான் இருந்து வருகிறது. அதேபோல் அம்பிகா திரையரங்கம் அருகிலேயே பிரியா காம்ப்ளக்ஸ், ஜாஸ் சினிமாஸ் என்று பல்வேறு பெரிய திரையரங்குகள் உள்ளன. இந்த நிலையில் மதுரையின் முக்கிய பகுதியில் இடம்பெற்றுள்ள அம்பிகா திரையரங்கத்தை இடித்துவிட்டு, வணிக வளாகத்தை கட்ட அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அம்பிகா திரையரங்க உரிமையாளர் பேசுகையில், அம்பிகா திரையரங்கின் கடைசி ரிலீஸ் வெள்ளிக் கிழமை வரும் படம்தான். இதனால் ரசிகர்கள் அபிமானிகள் அனைவரும் கடைசி ஒரு வாரத்தில் பங்கு நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். இங்கு ஏ கிரேடு தரத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டுள்ளோம். இதனை கட்டி முடிக்க 18 முதல் 24 மாதங்களாகும்.
அப்போது மக்கள் மத்தியில் மீண்டும் விரும்பி வரும் இடமாக இது இருக்கும். இதனை இடிக்க போகிறோம் என்று நினைக்கவில்லை. புதுப்பிக்கிறோம் என்றுதான் நினைத்து பணிகளை தொடங்கியுள்ளோம். மதுரைக்கு தேவையான ஒரு விஷயத்தை கொண்டு வருகிறோம். கிட்டத்தட்ட திரையரங்கம் கட்டி 35 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது என்று தெரிவித்துள்ளார். மதுரையில் கடந்த 20 ஆண்டுகளில் அதிகளவிலான ஹாலிவுட் படங்கள் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது அம்பிகா திரையரங்கில்தான். இந்த திரையரங்கும் இடிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியான பின், மதுரை இளைஞர்கள் பலரும் தங்களின் நினைவுகளை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக Fast & Furious படம் இந்த திரையரங்கில் மட்டுமே மதுரை ரசிகர்கள் பெரும்பாலும் பார்த்துள்ளனர்.