Add Listing
திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிடக்கூடாது உயர்நீதிமன்றம் உத்தரவு

  • 11 Oct 2025
  • 264
  • CULTURE&HERITAGE

மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின் படி, மலையை இனிமேலும் “திருப்பரங்குன்றம் மலை” என்ற பெயரில் மட்டுமே குறிப்பிட வேண்டும் என்றும், “சிக்கந்தர் மலை” அல்லது “சமணர் குன்று” என்ற பெயர்களில் அழைக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மலைப்பகுதியில் ஆடு, கோழி, மாடு போன்ற விலங்குகளை பலியிடுவது தடைசெய்யப்பட்டதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் மலையின் பெரும்பகுதி சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகத்திற்குச் சொந்தமானது என்றும், நெல்லித்தோப்பு, தர்கா, கொடிமரம், படிக்கட்டு பாதை போன்ற சில பகுதிகள் மட்டுமே சிக்கந்தர் தர்கா நிர்வாகத்திற்குரியது என்றும் நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து, தர்கா நிர்வாகம் ரம்ஜான் மற்றும் பக்ரீத் போன்ற இஸ்லாமிய பண்டிகைகளின் போது தொழுகை நடத்த அனுமதிக்கப்படும் நிலையில், விலங்குகளை பலியிடுதல், அசைவ உணவு சமைத்தல் அல்லது பரிமாறுதல் போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

நீதிபதிகள் ஜெ.நிஷாபானு மற்றும் எஸ்.ஸ்ரீமதி வழங்கிய இந்த தீர்ப்பில், மலை முழுவதும் பழமையான நினைவுச்சின்னமாகப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால், மலை மேல் மின்சாரம், குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளை அமைக்க முடியாது என்றும், இதனால் மலைக்கு சேதம் ஏற்படும் வகையில் எந்த புதிய கட்டுமான பணிகளும் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. தர்கா புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டுமானால், தொல்லியல் துறையின் அனுமதி பெறப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மத நல்லிணக்கத்தையும் பொது அமைதியையும் பேணுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு, திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தைக் குலைக்கும் எந்த செயல்பாடும் அனுமதிக்கப்படமாட்டாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பில், திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் புனித தலமாக கருதப்பட வேண்டும் என்றும், ஹிந்து மற்றும் முஸ்லிம் சமூகங்கள் தங்களுக்குரிய மத வழிபாட்டு நடைமுறைகளை சட்டத்தின் வரம்புக்குள் மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், சிக்கந்தர் தர்கா நிர்வாகம் விலங்கு பலி பழமையான வழக்கமான நடைமுறையாக இருந்தது என்பதை நிரூபிக்க விரும்பினால், அதற்கான ஆதாரங்களுடன் சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஹிந்து மக்கள் கட்சி தலைவர்கள் அர்ஜூன் சம்பத் மற்றும் சோலை கண்ணன் சார்பாக வாதாடியதற்காக, தமிழ்நாடு பிராமண சமாஜம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பு, திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் காக்கும் முக்கியமான சட்ட அடித்தளமாக மதுரையில் பரவலாக பாராட்டப்படுகிறது.