Add Listing
தூர்வாரப்படாத

தூர்வாரப்படாத கால்வாய் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை விழுங்குகிறது!

  • 23 Oct 2025
  • 264
  • LOCAL EVENTS

சோழவந்தான்: சோழவந்தான் அருகிலுள்ள கல்புளிச்சான்பட்டி மற்றும் நடுவூர் பகுதிகளில் உபரிநீர் கால்வாய்கள் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாததால், மழைநீர் செல்ல வழியின்றி வயல்களில் தேங்கி பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

விவசாயி பால்பாண்டி கூறியதாவது: “திருமங்கலம் கால்வாயிலிருந்து வெளியேறும் உபரிநீர் மலையூர், நடுவூர், கல்புளிச்சான்பட்டி வழியாக முதலைக்குளம் கண்மாயில் சேர்கிறது. இந்தக் கால்வாய் வழியிலேயே ஏராளமான ஏக்கர் நிலங்களில் சாகுபடி நடைபெறுகிறது. ஆனால், கால்வாய் முறையாக கட்டப்படாததாலும், தூர்வாரப்படாததாலும் தண்ணீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது,” என்றார்.அவர் மேலும் கூறினார்: “பருவமழை காலத்தில் நிலங்களில் தேங்கும் உபரிநீர் இந்தக் கால்வாய் வழியாக வெளியேற வேண்டும்.

ஆனால் தற்போது கால்வாய் அடைப்பு காரணமாக தண்ணீர் வயல்களில் தேங்கி பயிர்கள் மூழ்கி சேதமடைந்துள்ளன. அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் பயிர்கள் அழிந்து விவசாயிகள் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளனர். நாற்றங்கால் அமைக்கும் நிலங்களிலும் தண்ணீர் தேங்கி இருப்பதால் புதிய சாகுபடிக்கும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. தேங்கிய நீரால் துர்நாற்றம் வீசி சுகாதார பிரச்சினையும் உருவாகியுள்ளது. மேலும், கால்வாயில் தண்ணீர் செல்லாததால் நடுவூர் மற்றும் சுற்றுவட்டார குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்களின் அச்சமும் நிலவுகிறது.இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.