மதுரை ரேஸ்கோர்ஸில் விளையாடும் வீரர்களுக்கு "ஒரு சொட்டு குடிநீர் இல்லை"
- 11 Mar 2025
- 264
- SPORTS NEWS
மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒரே இடத்தில் அனைத்து விளையாட்டுக்கான அரங்குகள் இருந்தாலும் குடிப்பதற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாத அவலம் நீடிக்கிறது.
இங்குள்ள விளையாட்டு விடுதி வளாகத்தில் 140 மாணவர்கள் தங்கியுள்ளனர். தடகளம், வாலிபால், கூடைப்பந்து, ஜிம்னாஸ்டிக், நீச்சல் உட்பட பல்வேறு விளையாட்டுகளுக்காக ஆயிரக்கணக்கான வீரர், வீராங்கனைகள் வெளியில் இருந்து பயிற்சிக்கு வருகின்றனர். சில வகை விளையாட்டுகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. ஆனால் சொட்டு குடிநீர் கூட இங்கு இல்லை என்பதால் பயிற்சி பெறுவோர் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்தாலும் போதாமல் தவிக்கின்றனர். கோடை துவங்கி விட்டதால் வீரர்கள் தண்ணீர் தேவை அதிகமுள்ளது. இதற்காக அலைந்து திரிந்து விலைக்கு வாங்கி வர வேண்டியுள்ளது.
மாநகராட்சி மேயர் நினைத்தால் இங்கு மேல்நிலை குடிநீர்த்தொட்டி அமைக்கலாம். தொட்டி அமைக்க அதிகம் செலவாகாது. ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் குறைந்தது ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலைத் தொட்டி அமைக்க மாநகராட்சிக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்து வீரர், வீராங்கனைகளின் தண்ணீர் தாகத்தை நிரந்தரமாக தீர்க்க வேண்டும்.