மதுரை புதிய பாலத்திற்கு 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்' பெயர்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- 17 Feb 2026
- 264
- LOCAL EVENTS
மதுரை: மதுரை தமுக்கம் சந்திப்பில் இருந்து யானைக்கல் அண்ணா சிலை சந்திப்பு வரை தற்போது கட்டப்பட்டு இறுதி பணிகள் நடைபெற்று வரும் பாலத்திற்கு 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்' என பெயர் சூட்டப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் சாலை மேம்பாலப் பணிகள் தமிழக முதல்வரால் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பாலம் மதுரை மாநகரின் வடபகுதியையும், தென்பகுதியையும் இணைக்கும் விதமாக அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் ஏறுதளம் தமுக்கம் பகுதியில் தொடங்குகிறது. கோரிப்பாளையம் சந்திப்பை கடந்து நெல்பேட்டை அண்ணா சிலை சந்திப்பில் முடிகிறது. வைகை ஆற்றில் தற்போதைய ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்திற்கு இணையாக புதிதாக உயர்மட்ட பாலமாக அமைக்கப்படுகிறது.
மேலும் கூடுதலாக ஒரு இணைப்பு பாலம் கோரிப்பாளையம் சந்திப்பில் இருந்து செல்லூர் நோக்கி அமைய உள்ளது. பாலத்தின் கீழ் இருபுறமும் சேவை சாலை அமைக்கப்பட உள்ளது. இச்சாலை மேம்பாலத்தினால் மதுரை மாநகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இந்த நிலையில் பாலத்தின் ஒருபக்க கட்டுமானமான யானைக்கல் அண்ணா சிலை சந்திப்பில் இருந்து தமுக்கம் வரை தற்போது முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு, பூச்சு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற பிப்ரவரி 21 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
Add Listing