திருப்பரங்குன்றம் முருகன் கோயில் படிக்கட்டுகளில் பா.ஜ.,வினர் தர்ணா
- 28 Feb 2025
- 264
- LOCAL EVENTS
திருப்பரங்குன்றம் : மதுரை திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பழைய படிக்கட்டுகள் வழியாக செல்ல முயன்ற பா.ஜ., நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் கோயில் படிக்கட்டுகளில் இரவு முழுவதும் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு பா.ஜ., மாவட்டத் தலைவர் சிவலிங்கம், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் வேல்முருகன், செயலாளர் ராஜேஸ்வரன், இளைஞர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல்முருகன், மண்டல தலைவர் சரவணன் ஆகியோர் மலை மேல் செல்ல முயன்றனர். அவர்களை மலை அடிவாரத்தில் பாதுகாப்பிலிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி, 'காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை தான் மலை மேல் செல்ல அனுமதி உள்ளது. புதிய படிக்கட்டுகள் வழியாக செல்லலாம்' எனக் கூறினர்.
போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், உதவி கமிஷனர் சசிப்பிரியா, இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் தங்களை அனுமதிக்காததை கண்டித்து பா.ஜ., வினர் அடிவாரத்தில் உள்ள பழநி ஆண்டவர் கோயில் படிக்கட்டுகளில் அமர்ந்தனர். பின்னர் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அவர்கள் சுப்பிரமணிய சுவாமி கோயில் படிக்கட்டுகளில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். நேற்று காலை 6:00 மணிக்கு பா.ஜ., நிர்வாகிகளுடன் இன்ஸ்பெக்டர் மதுரைவீரன் மலை மேல் சென்றார். மலை மேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் பா.ஜ., நிர்வாகிகள் சுவாமி தரிசனம் முடித்து திரும்பினர். பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'மலை மேல் சுவாமி தரிசனத்திற்கு செல்ல பகலில் தான் அனுமதி என போலீசார் கூறுகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை மகா சிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபடுவதற்கு கூட இவ்வாறு தடை விதிக்கப்படுவது வேதனையாக உள்ளது' என்றனர்.