Add Listing
மாவட்ட

மாவட்ட விளையாட்டுப் போட்டி

  • 31 Jan 2026
  • 264
  • SPORTS NEWS

மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இளைஞர் விளையாட்டுத் திருவிழாவிற்கான மாவட்டஅளவிலான தடகள, குழு விளையாட்டுப்போட்டிகளை கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார்.

மதுரையில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல், வாலிபால், கேரம் இரட்டையர் பிரிவு, கயிறு இழுக்கும் போட்டி, ஆடவர் ஸ்ட்ரீட் கிரிக்கெட் மகளிர் எறிபந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் பங்கேற்றனர். ஒன்றியம் வாரியாக வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் பிரவீன்குமார் ஏற்றுக் கொண்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளர் வேல்முருகன். மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, விடுதி மேலாளர் முருகன், பயிற்சியாளர்கள் குமரேசன், ராமதாஸ், பாலாஜி, ராஜசேகர், ரஞ்சித்குமார் கலந்து கொண்டனர்.

ஊராட்சி ஒன்றியங்களில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் ரேஸ்கோர்ஸ் வந்து சேர தாமதமானதால் 11:30 மணிக்கு விழா துவங்கி, அதன் பின் போட்டிகள் வெயிலில் நடந்தது. கலெக்டர் முன்னிலையில் நடந்த அணிவகுப்பு மரியாதையில் கலந்து கொண்டது சந்தோஷமாக இருந்ததாக வீரர், வீராங்கனைகள் தெரிவித்தனர். இதில் பலர் முதன்முறையாக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு வந்ததால் சிந்தடிக் தடகள டிராக்கையும் மற்ற விளையாட்டுப் போட்டி அரங்குகளையும் கண்டு பிரமித்தனர். இன்று (ஜன.31) காலை ஓவியப் போட்டி, மகளிருக்கான கோலப்போட்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது.