Add Listing
மதுரையில்

மதுரையில் மணக்க மணக்க பிரியாணி.. 150 ஆடுகள், 300 கோழிகள்.. கோயில் திருவிழாவில் அள்ளி சென்ற பக்தர்கள்

  • 19 Feb 2025
  • 264
  • LOCAL EVENTS

மதுரை: திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி முனியாண்டி கோவிலில் 150 ஆடுகள், 300 கோழிகள், பலியிட்டு 2500 கிலோ அரிசியில் பிரியாணி சமைத்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பாத்திரங்களில் வழங்கப்பட்டது. இந்த பிரியாணி திருவிழாவில் வில்லூர், அகத்தாபட்டி, களிக்குடி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அன்னதானத்தை வாங்கி சென்றனர். இதேபோன்று இந்த முனியாண்டி கோயிலுக்கு ஆந்திரா, கேரளா, கர்நாடகா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா என பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் உள்ள முனியாண்டி கோவிலில் ஆண்டுதோறும் இரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திருவிழா கொடுப்பது வழக்கம். அதாவது ஒரு சமுதாயத்தினர் தை மாதம் 2வது வெள்ளிக்கிழமையும், இன்னொரு தரப்பினர் மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையும் திருவிழா கொடுப்பது வழக்கம்.

இந்த திருவிழாவில் வழக்கமாக ஆட்டுக்கறி சாப்பாட்டுக்கு பதிலாக முனியாண்டிக்கு பிரியாணி படைப்பது வழக்கம். அதுவும் ஒரு ஆடு இரண்டு ஆடு இல்லை. மொத்தம் 100க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு பிரியாணி படைக்கப்பட்டு திருவிழா நடக்கும். அந்த வகையில் கடந்த தை மாசம் இரண்டாவது சனிக்கிழமை ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திருவிழா நடத்தினர். இந்த நிலையில் மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று முன் தினம் திருவிழா நடந்தது. வெள்ளிக்கிழமையன்று மாலை பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோவில் நிலைமாலையுடன் சுற்றுப்புறத்தை சேர்ந்த கிராமத்தினர், பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து பூத்தட்டுகளை தலையில் சுமந்து ஊர்வலமாக வந்து நிலைமாலையை கோவிலில் வைத்து வழிபட்டார்கள். இதன் பின்னர் இரவு சாம பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து நேர்த்திக்கடனாக வந்த ஆடுகள், கோழிகள் முனியாண்டிக்கு பலியிடப்பட்டன. இந்த ஆண்டு மொத்தம் 150 ஆடுகள் பலியிடப்பட்டது. 300 க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டன. பின்னர் 2,500 கிலோ அரிசியில் பலியிடப்பட்ட ஆடுகள், கோழிகளை வைத்து பிரியாணி தயார் செய்யப்பட்டு சாமிக்கு படைக்கப்பட்டது. தொடர்ந்து பிரியாணியானது பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

சாமிக்கு படைத்த பிரியாணி என்பதால், சுற்றுப்புறத்தை சேர்ந்த மக்கள் பாத்திரங்களை கொண்டு வந்து பிரியாணியை வாங்கி சென்றனர். கள்ளிக்குடி, அகத்தாபட்டி, வில்லூர் உள்ளிட்ட அருகில் உள்ள கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, தாங்கள் கொண்டு வந்திருந்த பாத்திரங்களில் பிரியாணியை வாங்கிச் சென்றனர். மதுரை திருமங்கலத்தில் உள்ள இந்த முனியாண்டி கோவிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் வருகை தருவார்கள். வெளி மாநிலம் மட்டுமின்றி சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை சேர்ந்த பக்தர்களும் ஆண்டுதோறும் இந்த பூஜையில் பங்கேற்பார்கள் என்றும், முனியாண்டி அருள்பெற்று செல்வதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.