Add Listing
குன்றத்து

குன்றத்து முருகன் கோயிலில் பக்தர்கள் இடையே இடம் பிடிக்க நெரிசல்; கந்தசஷ்டி விழா இன்று தொடக்கம்.

  • 22 Oct 2025
  • 264
  • CULTURE&HERITAGE

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று (அக்.22) காலை 7 மணிக்கு சுவாமிகளுக்குக் காப்பு கட்டும் நிகழ்வுடன் தொடங்குகிறது. அனுக்ஞை பூஜை, யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்ற பின் ஆறுமுக சண்முகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிவாச்சாரியார்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னர், நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டியதன் பிறகு, காலை 9 மணிக்கு மேல் விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் காப்பு கட்டப்படும்.

திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். இதற்கான இடம் பிடிக்க நேற்று மண்டபங்களில் கடும் நெரிசலும் போட்டியும் நிலவியது. நேற்று முன்தினம் முதலே பக்தர்கள் போர்வைகள் விரித்து, தங்கள் பெயர் மற்றும் ஊர் பெயர் எழுதப்பட்ட சாக்பீஸ்களை விட்டு இடம் ஒதுக்கி வைத்தனர்.

பொதுவாக தீபாவளிக்கு மறுநாள் கந்த சஷ்டி தொடங்கும். ஆனால், இந்தாண்டு சஷ்டி இன்று துவங்குவதால், தீபாவளி இரவில் பக்தர்கள் கோயிலில் தங்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதனால், நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலுக்கு வந்து மண்டபங்களில் இடம் பிடிக்க தொடங்கினர்.