மாநகராட்சியில் கழிவுநீர் பராமரிப்பு கேள்விக்குறியானதால் வார்டுகளில் தேங்குது 80 சதவீதம் வெளியேறுவது 20 சதவீதமே
- 03 Mar 2025
- 264
- LOCAL EVENTS
மதுரை: மதுரை மாநகராட்சியில் பம்பிங் ஸ்டேஷன் பராமரிப்பு கேள்விக்குறியானதால், நகரில் உருவாகும் கழிவு நீரில் 80 சதவீதம் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு செல்லாமல் வார்டுகளில் தேங்கி துர்நாற்றத்திற்கு காரணமாகிறது.மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் கழிவுநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வெள்ளக்கல் பகுதியில் 145 எம்.எல்.டி., சக்கிமங்கலத்தில் 45 எம்.எல்.டி., திறன் கொண்ட இரண்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. வைகை வடகரை பகுதி (விரிவாக்க பகுதி) வார்டுகளுக்கு சக்கிமங்கலத்திலும், நகரில் பழைய 72 வார்டுகளுக்காக வெள்ளக்கல்லுக்கு செல்லும் வகையில் கழிவுநீர் கடத்தி சுத்திகரிக்கும் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையங்களுக்கு கழிவு நீரை கொண்டுசெல்ல 9 பிரதான, 36 துணை பம்பிங் ஸ்டேஷன்கள், 30 லிப்ட் வெல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பம்பிங் ஸ்டேஷன்கள் மின்தடை நேரத்திலும் இயங்கும் வகையில் 212 மோட்டார்கள், ஜெனரேட்டர்களுடன் பொறியியல் பிரிவு மூலம் செயல்படுகிறது.
அவை வைகையில் கலப்பது, பொங்கி வெளியேறி ரோடுகள், கால்வாய்கள், தெருக்கள், குடியிருப்புகளில் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்துகிறது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. காரணம் பம்பிங் ஸ்டேஷன்களை மேம்படுத்தாதது, பராமரிப்பில் கேள்விக்குறி, போதிய ஆட்கள் இல்லாதது என்கின்றனர், மாநகராட்சி பொறியாளர்கள்.
மாநகராட்சி அ.தி.மு.க., எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா கூறியதாவது: நகர்ப் பகுதிகளில் கழிவுநீர் தேங்குவதை கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்தும் சீரமைக்க மாநகராட்சி ஆர்வம் காட்டவில்லை. தற்போது செயல்படும் 2 சுத்திகரிப்பு நிலையங்களும் இன்னும் 60 ஆண்டுகளுக்கு பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பம்பிங் ஸ்டேஷன்களில் உள்ள 212 மோட்டார்களில் 127 மட்டுமே செயல்படுகின்றன. ஜெனரேட்டர்கள் 35 மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.பலஇடங்களில் குழாய்களில் மண் அடைப்பு, குழாய் தன்மை காரணமாக உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுகிறது. ஜெனரேட்டர் வசதியில்லாததால் மின்தடை நேரத்திலும் சம்பந்தப்பட்ட வார்டுகளில், பம்பிங் ஸ்டேஷன்களில் பணிகள் நடப்பதில்லை. பல ஸ்டேஷன்களில் பழுதான மோட்டாருக்கு மாற்று எதுவும் இல்லை. இதனால் மாநகராட்சி கழிவுநீரால் பிரச்னைகள் ஏற்பட்டு, சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 80 சதவீதம் செல்வதில்லை. பெரும்பாலும் வைகையாற்றில் கலந்துவிடுவதால் நிலத்தடி நீரை மாசுபடுத்துகிறது. கமிஷனர் சித்ரா பிரச்னையின் தீவிரம் கருதி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.